‘அதானி’ குழுமத்தின் வரவுசூடுபிடிக்கும் 5ஜி ஏலம்

தினமலர்  தினமலர்
‘அதானி’ குழுமத்தின் வரவுசூடுபிடிக்கும் 5ஜி ஏலம்

புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான, ‘அதானி குழுமம்’ 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்குபெற இருப்பதாக வந்த செய்தியை அடுத்து, ஏலம் சூடுபிடிக்கும் என சந்தை முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.


இதன் தொடர்ச்சியாக நேற்று, ‘பார்தி ஏர்டெல்’ நிறுவன பங்குகள் விலை, வர்த்தகத்தின் இடையே 5 சதவீதம் வரை சரிவைக் கண்டது.நாட்டின் 5ஜி அலைக்கற்றையை வாங்கும் போட்டியில், ‘ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா’ ஆகிய மூன்று நிறுவனங்கள் களத்தில் இருந்த நிலையில், அதானி குழுமமும் போட்டியில் நுழைய உள்ளதாக தெரிவித்து உள்ளது.இருப்பினும், அதானி குழுமம் தன்னுடைய அறிக்கையில் விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றுக்கான தனி ‘நெட்வொர்க்’ வசதிக்காக ஏலம் எடுக்க இருப்பதாகவும்; பொதுமக்களுக்கான தொலைதொடர்பு சேவைக்காக இல்லை என்றும் தெரிவித்துள்ளது.


இருப்பினும், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், தொலைதொடர்பு சேவையில் அதானி குழுமம் நுழைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும்; அதன் முதற்படியாக இந்த அறிவிப்பு வந்திருப்பதாகவும் கருதுகின்றனர்.இந்த காரணத்தால், ஏர்டெல் நிறுவன பங்குகள் விலை, வர்த்தகத்தின் துவக்கத்தில், கிட்டத்தட்ட 5 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டது.இம்மாதம் 26ம் தேதியன்று நடைபெற இருக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கெடுப்பதற்காக, ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா, அதானி குழுமம் ஆகிய நான்கு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.துவக்கத்தில் ஏலம் மந்தமாக இருக்கக்கூடும் என எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது அதானி நுழைந்திருப்பதை அடுத்து, போட்டி கடுமையாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மூலக்கதை