அயர்லாந்துடன் இன்று முதல் டி20; 2 புதிய வீரர்களுக்கு வாய்ப்பு; வெற்றி மட்டுமே ஒரே நோக்கம்.! கேப்டன் ஹர்திக்பாண்டியா பேட்டி

தினகரன்  தினகரன்
அயர்லாந்துடன் இன்று முதல் டி20; 2 புதிய வீரர்களுக்கு வாய்ப்பு; வெற்றி மட்டுமே ஒரே நோக்கம்.! கேப்டன் ஹர்திக்பாண்டியா பேட்டி

டப்ளின்: ஹர்திக்பாண்டியா தலைமையிலான இளம் இந்திய அணி அயர்லாந்தில் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. இதன் முதல் போட்டி டப்ளின் நகரில் இந்திய நேரப்படி இன்று இரவு 9 மணிக்கு தொடங்குகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இளம் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி இருவருக்கும் அயர்லாந்து தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், தென்னாப்பிரிக்க தொடரில் அபாரமாகச் செயல்பட்ட தினேஷ் கார்த்திக்கும் இத்தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார். தினேஷ் கார்த்திக், டி20 உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது என்றால், அவருக்கு இனி சில போட்டிகளில் ரெகுலராக வாய்ப்பு கிடைக்கும் எனக் கருதப்படுகிறது. இதனால், அவர் சேர்க்கப்படுவது உறுதி. மேலும், டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்த இளம் வீரர்கள் இத்தொடரில் அபாரமாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இதன் காரணமாக, இத்தொடர் மீது அதிக எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கேப்டன் ஹர்திக்பாண்டியா கூறுகையில், ``இந்த தொடரில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புகிறோம். அதே நேரத்தில் சிறந்த அணியை களமிறக்குவது மிகவும் முக்கியம். இந்த தொடரின் முதல் போட்டியில் இரண்டு வீரர்கள் விளையாட வாய்ப்பு உள்ளது. நான் இங்கு எதையும் காட்ட வரவில்லை. இந்திய அணியை வழிநடத்த அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. இது எனக்கு மிகப்பெரிய விஷயம். டோனி, கோஹ்லி ஆகியோரது கேப்டன்ஷிப்பில் இருந்து நிறைய கற்று இருக்கிறேன். அதே சமயம் நான் நானாக இருக்கவே விரும்புகிறேன். இத்தொடரில் மிகச்சிறப்பாக அணியை வழிநடத்தி வெற்றியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுதான் எனது ஒரே நோக்கம்” என்றார். ஹர்திக் பாண்டியா கூறியதுபோல், இரண்டு வீரர்கள் இன்று அறிமுகமாகி ஆட அதிக வாய்ப்புள்ளது. மிடில் வரிசையில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே இருப்பதால் ராகுல்திரிபாதியை களமிறக்க வாய்ப்புள்ளது. இதுபோல் பந்துவீச்சாளர்களில் உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

மூலக்கதை