இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பயணம் செய்வது சவாலானது: ராகுல் டிராவிட் பேட்டி

தினகரன்  தினகரன்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பயணம் செய்வது சவாலானது: ராகுல் டிராவிட் பேட்டி

பெங்களூரு: இந்தியா-தென்ஆப்ரிக்கா அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் பெங்களூருவில் நேற்று நடந்த 5வது மற்றும் கடைசி டி.20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் 2-2 என தொடர் சமனில் முடிந்த நிலையில் இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்துகொண்டன. 4 போட்டியில்  6 விக்கெட் வீழ்த்திய புவனேஸ்வர்குமார் தொடர் நாயகன் விருது பெற்றார். இதனிடையே  இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல்டிராவிட்  அளித்த பேட்டி: தலைமைப் பயிற்சியாளராகப் பயணம் செய்வது சவாலானது. கடைசி 8 மாதத்தில் மட்டும் 6 கேப்டன்களுடன் பணியாற்றிவிட்டேன். இது என் பிளான்படியே நடக்கவில்லை. கொரோனா மற்றும் பயோ பபுளின் தாக்கம் தான் இதுக்கு காரணம். தொடர்ந்து அதிக போட்டிகளில் விளையாடுகிறோம். இதனால் வீரர்களின் பணிச்சுமையை குறைக்கதான் இப்படி பல கேப்டன்கள் மாற்றப்பட்டனர். இதன் மூலம் இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு இளைஞர்களுக்கு கிடைத்துள்ளது. சிலருடன் வேலை செய்வது மிகவும் வேடிக்கையாக இருந்தது. ஒவ்வொரு போட்டியிலும் கொஞ்சம் முன்னேற்றம் அடைகிறோம், நன்றாக விளையாடுகிறோம். எனது பயிற்சியாளர் பயணத்தை திரும்பி பார்த்தால் தென் ஆப்ரிக்க பயணம் மட்டும் ஏமாற்றமாக அமைந்தது. அது டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு பாதிப்பை தந்தது. ஆனால் ஒயிட் பால் கிரிக்கெட்டில் நன்றாகவே விளையாடுகிறோம். இந்த தொடரிலும் கூட முக்கிய வீரர்கள் இல்லாமல் இளைஞர்கள் நன்றாக விளையாடுகின்றனர். ஐபிஎல் மூலம் நமக்கு நிறைய திறமையான வீரர்கள் கிடைத்துள்ளனர். இதனால் நமக்கு பல்வேறு ஆப்சன்கள் பிளேயிங் லெவனுக்கு கிடைத்துள்ளது. அதுவும் இளம் வீரர்கள் சிலர் பந்து வீசும் வேகம் எல்லாம் பிரமிப்பாக உள்ளது என்றார்.மேலும் இன்றைய போட்டியில் (நேற்று) நாங்கள் ஒரு தாக்குதல் பிராண்ட் கிரிக்கெட்டை விளையாட விரும்பினோம். தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.  டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பிடிக்கும் அவரின் கனவு உயிருடன் இருப்பதாகவும் டிராவிட் தெரிவித்தார்.இங்கிலாந்தில் வெற்றிக்கு அதிகம் பங்களிக்க விரும்புகிறேன்: இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பன்ட் கூறியதாவது: ‘‘0-2 என்ற நிலையில் இருந்து, அதிரடியாக மீண்டு வந்தோம். கேப்டனாக, வீரராக 100% உழைப்பை கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே எனது எண்ணத்தில் இருந்தது. முதல்முறையாக தொடர்ந்து பலமுறை டாஸை இழந்திருக்கிறேன். ஆனால் அது என் கட்டுப்பாட்டில் இல்லை, எனவே நான் அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை. அடுத்து இங்கிலாந்தில் கடைசி டெஸ்டை வெல்வது தான் அணியின் பார்வையில் உள்ளது. இதில், சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. தனிப்பட்ட முறையில் அணியை வெற்றிபெறச் செய்வதற்கு அதிக பங்களிப்பைச் செய்ய விரும்புகிறேன்.’’   என்றார்.லண்டன் புறப்பட்ட டிராவிட், பன்ட், ஸ்ரேயாஸ்: இங்கிலாந்துக்கு எதிரான கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட கடைசி டெஸ்ட் வரும்  ஜூலை 1ம்தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது. இதற்காக ரோகித்சர்மா,கோஹ்லி, ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் கடந்தவாரமே அங்கு சென்றுவிட்டனர். இந்நிலையில்இன்று காலை பெங்களூருவில் இருந்து பயிற்சியாளர் டிராவிட், ரிஷப் பன்ட், ஸ்ரேயாஸ் அய்யர் லண்டன் புறப்பட்டனர்.  அயர்லாந்துக்கு எதிராக வரும் 26 மற்றும் 28ம்தேதி நடைபெற உள்ள 2 டி.20 போட்டிக்காக ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி வரும் 24ம் தேதி மும்பையில் இருந்து டப்ளினுக்கு புறப்படுகிறது.

மூலக்கதை