ஹாலே ஓபன் டென்னிஸ் பைனல்: மெட்வடேவை வீழ்த்தி ஹர்காஸ் சாம்பியன்

தினகரன்  தினகரன்
ஹாலே ஓபன் டென்னிஸ் பைனல்: மெட்வடேவை வீழ்த்தி ஹர்காஸ் சாம்பியன்

ஹாலே: ஜெர்மனியின் ஹாலே நகரில் நடந்த ஹாலே ஓபன் ஆடவர் ஒற்றையர் பைனலில் ஏடிபி தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவும், 12ம் இடத்தில் உள்ள போலந்தின் ஹியூபர்ட் ஹர்காசும் மோதினர்.இதில் முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் ஹியூபர்ட் ஹர்காஸ் எளிதாக கைப்பற்றினார். முதல் செட்டில் ஹர்காசின் முதல் சர்வீஸ்கள் அனைத்தும், கச்சிதமாக விழுந்தன. ஆனால் மெட்வடேவ், முதல் செட்டில் தனது முதல் சர்வீஸ்களில் அதிகம் தடுமாறினார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஹர்காஸ், துல்லியமான பிளேஸ்மென்ட்கள் மூலம், அடுத்தடுத்து மெட்வடேவின் கேம்களை பிரேக் செய்து, முதல் செட்டை கைப்பற்றினார்.2வது செட்டில் மெட்வடேவின் ஆட்டத்திறன் ஓரளவு மேம்பட்டிருந்தது. ஆனாலும் அவரால் அவரது கேம்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. ஹர்காசும் தனது கேம்களை தக்க வைத்துக் கொண்டு, சரியான சந்தர்ப்பத்தில் மெட்வடேவின் ஒரு கேமை பிரேக் செய்தார். இதன் மூலம் 2வது செட்டையும் 6-4 என கைப்பற்றி, ஹல்லே ஓபனில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.போட்டிக்கு பின்னர் மெட்வடேவ் கூறுகையில், ‘‘உண்மையில் ஹர்காஸ் பதற்றமே இல்லாமல் நிதானமான அணுகுமுறையுடன் ஆடினார். இன்று அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. அவருக்கு டென்னிசில் நல்ல எதிர்காலம் உள்ளது’’ என்று பாராட்டினார்.

மூலக்கதை