உளவு பலூனை சுட்டு வீழ்த்திய விவகாரம் கடும் பின்விளைவுகளை அமெரிக்கா சந்திக்கும்: சீனா எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
உளவு பலூனை சுட்டு வீழ்த்திய விவகாரம் கடும் பின்விளைவுகளை அமெரிக்கா சந்திக்கும்: சீனா எச்சரிக்கை

நியூயார்க்: அட்லாண்டிக் பெருங்கடலில் பென்டகன் மீது பறந்து கொண்டிருந்த சந்தேகத்துக்குரிய சீனாவின் உளவு பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அந்நாடு எச்சரித்துள்ளது. அமெரிக்காவில் முற்றிலும் ராணுவ கண்காணிப்பில் இருக்கும் மொன்டானா அணுசக்தி ஏவுதளத்தின் மேல் பகுதியில் மர்ம பலூன் பறப்பதை ரேடார்களின் மூலம் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதே போல, லத்தீன் அமெரிக்கா பகுதியிலும் ஒரு சீன உளவு பலூன் பறந்து வருவதாக அமெரிக்க ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. முதலில் வெள்ளை நிறத்தில் ஏதோ பறக்கிறது என்று மட்டுமே தெரிவித்த ராணுவ அதிகாரிகள் ஆய்வு செய்த போது, சென்சார்கள் மற்றும் கேமரா பொருத்திய ஹீலியம் பலூன் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் பல தொலைத்தொடர்பு சாதனங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்தும் பலூனில் பொருத்தப்பட்டிருந்த பெரிய ராட்சதசோலார் பேனல்கள் உதவியுடன் இயங்கிக் கொண்டிருந்தன. இறுதியில் அந்த பலூன் சீனத் தயாரிப்பு என்று கண்டுபிடிக்கப்பட்டது.முதலில் இந்த பலூன் தங்களுடையது கிடையாது என மறுப்பு தெரிவித்த சீனா, ‘அந்த பலூன் உளவு பலூன் அல்ல. வானிலையை கணிப்பது மட்டுமே இதன் வேலை. இதில் உளவு கருவி எதுவும் பொருத்தப்படவில்லை. அட்லாண்டிக் பெருங்கடலில் சர்வதேச எல்லையில்தான் பறந்து கொண்டிருந்த போது, காற்றின் வேகம் அதிகமான காரணத்தால் அமெரிக்காவின் வான் எல்லைக்குள் தவறுதலாக நுழைந்துவிட்டது,’ என்று விளக்கம் அளித்தது. இந்த பலூன் காரணமாக அமெரிக்க அதிபருக்கு அழுத்தம் அதிகரித்தது. அதை உடனே சுட்டு வீழ்த்தி சீனாவிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அட்லாண்டிக் கடலுக்கு மேலே சென்ற பிறகு அந்த பலூனை சுட்டு வீழ்த்த அமெரிக்க விமானப்படைக்கு அதிபர் பைடன் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து வெர்ஜீனியாவில் உள்ள லாங்லி விமான படையில் இருந்து புறப்பட்ட எப் 22 போர் விமானம் ஒரு ஏவுகணை தாக்குதல் மூலம், மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தெற்கு கரோலினா கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை பலூனை சுட்டு வீழ்த்தியது. சுட்டு வீழ்த்தப்பட்ட பலூனின் பாகங்கள் தெற்கு கரோலினாவில் இருக்கும் மைர்ட்டல் கடல் பகுதியில் விழுந்துள்ளன. ராட்சத கிரேன்கள் கொண்ட மீட்பு கப்பல்கள் மூலம் அமெரிக்க கடலோர பாதுகாப்பு படை இந்த பாகங்களை மீட்கும் பணிகளில் இறங்கியுள்ளது. ஆழமான கடல் பகுதியில் விழாமல், 14 மீட்டர் மட்டுமே ஆழம் உள்ள பகுதியில் விழுந்திருப்பதால் எளிதாக மீட்க முடியும் என்று கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பலூன் அமெரிக்காவின் ராணுவ தளவாடங்களை உளவு பார்க்கவே சீனா அனுப்பி உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், தனது நாட்டின் பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்காவின் நடவடிக்கையை சீனா பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து சீன பாதுகாப்பு துறையின் செய்தி தொடர்பாளர் டான் கெபெய் கூறுகையில்``இது வானிலை தேவைகளுக்கான பலூன். இதற்கும் உளவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சீனா மீது தவறான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. அமெரிக்கா பலூனை தாக்கியது மிகவும் தவறான செயல். சீன பலூனை சுட்டு வீழ்த்திய விவகாரத்தில் அமெரிக்கா சர்வதேச விதிகளை மீறிவிட்டது. இதற்கான பின்விளைவுகளை அமெரிக்கா எதிர்கொள்ள நேரிடும்,’’ என்று தெரிவித்தார்.

மூலக்கதை