ரோகித் போல மின்னும் சுப்மன் | ஜனவரி 22, 2023

தினமலர்  தினமலர்
ரோகித் போல மின்னும் சுப்மன் | ஜனவரி 22, 2023

கராச்சி: ‘‘ஒருநாள் போட்டிகளில் ‘மினி’ ரோகித் சர்மாவாக ஜொலிக்கிறார் சுப்மன் கில். இவரது ஆட்டத்தில் மாறுதல் செய்ய தேவையில்லை,’’ என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா தெரிவித்தார்.

இந்திய மண்ணில் வரும் அக்டோபரில் உலக கோப்பை தொடர்(50 ஓவர்) நடக்க உள்ளது. இதற்கு தயாராகும் விதமாக இந்த ஆண்டு இந்திய அணி அதிகமான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலில் இலங்கைக்கு எதிரான  தொடரை வென்றது. அடுத்து நியூசிலாந்தையும் சாய்த்தது. இதில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மாவுடன்  துவக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில், 149 பந்தில் 208 ரன் விளாசி, வெற்றிக்கு கைகொடுத்தார். இரண்டாவது போட்டியில் 40 ரன் எடுத்து, வெற்றிக்கு அடித்தளம் அமைத்தார்.

ஒருநாள் அரங்கில் இளம் சுப்மன், 23 வளர்ச்சி வியக்க வைக்கிறது. பஞ்சாப்பை சேர்ந்த இவர், 20 ஒருநாள் போட்டிகளில் 1142 ரன் எடுத்துள்ளார். இளம் வயதில் இரட்டை சதம், அதிவேக 1000 ரன்(19 இன்னிங்ஸ்), அதிக சராசரி ரன்(71.37), அதிக ‘ஸ்டிரைக் ரேட்’(107.33) என அசத்துகிறார். இவரை அனுபவ ரோகித் சர்மாவுடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.

இது குறித்து ரமீஸ் ராஜா கூறியது:

ஒருநாள் போட்டிகளில் திறமைமிக்க வீரராக திகழ்கிறார் சுப்மன் கில். களத்தில் தேவையான கால அவகாசம் எடுத்துக் கொண்டு, ‘கூலாக’ பேட் செய்கிறார். போகப் போக ஆக்ரோஷமாக விளையாட துவங்குவார். தற்போது ஆட்டத்தில் எவ்வித மாறுதலும் செய்ய தேவையில்லை. இரட்டை சதம் விளாசியது இவரது தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்திருக்கும்.

இந்திய அணியின் பேட்டிங்கிற்கு ரோகித் சர்மா பலம் சேர்க்கிறார். ‘ஹூக்’, ‘புல் ஷாட்’ என கிரிக்கெட்டின் அனைத்து வகை ‘ஷாட்’ அடிப்பதில் வல்லவர். இதே போன்று சுப்மனும் விளையாடுகிறார். இவரை ‘மினி’ ரோகித் சர்மா என அழைக்கலாம். பவுலிங்கும் தரமாக உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய பவுலர்கள் சரியான அளவில் துல்லியமாக பந்துவீசினர்.

சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்துவது கடினம் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.  இதிலிருந்து பாகிஸ்தான் உள்ளிட்ட மற்ற இந்திய துணை கண்டத்து அணிகள் பாடம் படிக்க வேண்டும். பாகிஸ்தான் அணி திறமையானது தான். ஆனாலும் இந்தியாவை போல உள்ளூரில் தொடர்ந்து வெற்றி பெறுவதில்லை. உலக கோப்பை போட்டி இந்த ஆண்டு நடக்க உள்ள நிலையில், இந்தியாவின் வெற்றிநடை தொடர்வது பாராட்டுக்குரியது.

இவ்வாறு ரமீஸ் ராஜா கூறினார்.

கவாஸ்கர் புகழாரம்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கரும் சுப்மன் கில்லை பாராட்டினார். இரண்டாவது போட்டிக்கு பின் இவரிடம் கவாஸ்கர் பேசுகையில்,‘‘துவக்கத்தில் களமிறங்கும் நீங்கள் மிகவும் சீராக ‘பேட்’ செய்கிறீர்கள். ஆட்டத்தில் ஒருவித மென்மையை காண முடிகிறது. உங்களை ‘ஸ்மூத்மேன்’ கில் என செல்லமாக அழைக்க போகிறேன்,’’என்றார். இதனை ஏற்றுக் கொண்ட சுப்மன்,‘‘நீங்கள் தாராளமாக அழைக்கலாம் சார்,’’என்று தன்னடக்கத்துடன் கூறினார்.

மூலக்கதை