உலக கோப்பை கால்பந்து ஒரு கோல் அடித்து பெல்ஜியம் வெற்றி: கடைசி வரை போராடிய கனடா

தினகரன்  தினகரன்
உலக கோப்பை கால்பந்து ஒரு கோல் அடித்து பெல்ஜியம் வெற்றி: கடைசி வரை போராடிய கனடா

தோகா: 22வது பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்றிரவு 12.30 மணிக்கு அஹ்மத் பின் அலி ஸ்டேடியத்தில் தொடங்கி நடந்த போட்டியில் எப் பிரிவில் உலக தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள பெல்ஜியம் 41வது இடத்தில் உள்ள கனடாவுடன் மோதியது. தனித்திறமையாளர்கள் அதிகம் உள்ள பெல்ஜியத்திற்கு கனடா அணி சவால் அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதுமட்டுமல்லாமல் இரு அணிகளும் ஒரே ஃபார்மேஷனான 3-4-2-1 என்று களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய 10வது நிமிடத்திலேயே கனடா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் அந்த அணியின் டேவிஸ் அடித்த பந்தை, பெல்ஜியத்தின் கோர்டோயிஸ் சரியாக கணித்து தடுத்தார். இருந்தும் அடுத்த சில நிமிடங்களில் கனடா கோல் அடிக்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட முதல் 17 நிமிடங்களில் பெல்ஜியம் அணியின் ஃபாக்ஸிற்குள் கனடா அணி 12 முறை பந்தை கொண்டு வந்தது. இருந்தும் கனடாவின் தாக்குதலை பெல்ஜியம் தொடர்ந்து தடுத்தது. இரு அணிகளும் சரிக்கு சமமாக களத்தில் மோதிக்கொண்டே இருந்தன. முதல் பாதியில் ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் மிச்சி பாட்சுவாய் முதல் கோலை அடித்து அசத்தினார். இதன் மூலம் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் பெல்ஜியம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதனால் பாதி ஆட்டம் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. கனடா-பெல்ஜியம் வீரர்கள் அதிகமாக அட்டாக்கிங் பாணியில் ஆடினர். பெல்ஜியம் அணியின் அட்டாக்கை கனடா கவுன்ட்டர் அட்டாக் செய்ய, கனடா அணியின் அட்டாக்கை பெல்ஜியம் கவுன்ட்டர் அட்டாக் செய்ய என்று ஆட்டம் சூடுபிடித்தது. அதேபோல் கனடா அணியின் தாக்குதலை, பெல்ஜியம் அணி அனுபவம் மூலம் தொடர்ந்து தடுத்து நிறுத்திக் கொண்டே இருந்தது. கனடா தொடர்ந்து முயற்சித்தும், கடைசி நேரத்தில் சொதப்பியது. மேலும் பெல்ஜியம் கோல்கீப்பர் கோர்டோயிஸை தகர்க்க, கனடா அணி கடைசி வரை போராடியது. ஆனால் கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் பெல்ஜியம் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு 3 புள்ளிகள் கிடைத்து. இதே பிரிவில் நேற்று மாலை மொரோக்கோ - குரோஷியா அணிகள் மோதிய போட்டி கோல்கள் இன்றி டிராவில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

மூலக்கதை