மீண்டும் சாதிப்பாரா தவான் | நவம்பர் 23, 2022

தினமலர்  தினமலர்
மீண்டும் சாதிப்பாரா தவான் | நவம்பர் 23, 2022

ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தவான் தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்று சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஆக்லாந்தில் நாளை நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் ஹாமில்டன் (நவ. 27), கிறைஸ்ட்சர்ச்சில் (நவ. 30) நடக்கவுள்ளன.

 

இந்திய அணியில் ‘ரெகுலர்’ கேப்டன் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, லோகேஷ் ராகுல் உள்ளிட்ட சீனியர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அணியை ஷிகர் தவான் 36, வழிநடத்துகிறார். துணை கேப்டனாக ரிஷாப் பன்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு கேப்டனாக தவான் நியமிக்கப்பட்டது முதன்முறையல்ல. ஏற்கனவே மூன்று தொடர்களுக்கு கேப்டனாக இருந்துள்ளார். இதில் விளையாடிய 9 போட்டியில், 7 வெற்றி, 2 தோல்வியை பெற்றுத் தந்துள்ளார். தவிர, இலங்கை (2–1), தென் ஆப்ரிக்கா (2–1), வெஸ்ட் இண்டீஸ் (3–0) அணிகளுக்கு எதிராக தொடரை கைப்பற்றி கோப்பை வென்று தந்துள்ளார். எனவே இவர், நியூசிலாந்து தொடரிலும் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதுகுறித்து தவான் கூறுகையில், ‘‘நிறைய போட்டிகளில் விளையாடும் போது தான் சிறந்த அனுபவம் கிடைக்கும். தவிர, வீரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடந்த போட்டியில் செய்த தவறுகளை திருத்திக் கொள்ள முடியும். தற்போது, கேப்டனாக முதிர்ச்சியடைந்துள்ளேன். போட்டியில் அணியின் வெற்றிக்காக கடினமான முடிவுகளை எடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது,’’ என்றார்.

மூலக்கதை