விஜயதசமி வெளியீடுகளில் தமிழ் சினிமா தொடர்புகள்

தினமலர்  தினமலர்
விஜயதசமி வெளியீடுகளில் தமிழ் சினிமா தொடர்புகள்

ஒவ்வொரு வருடத்திலும் பொங்கல், தீபாவளி வெளியீடுகள்தான் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாக இருக்கும். அதே சமயம் பள்ளிகள் விடுமுறை விடப்படும் காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் வரும் பண்டிகையான விஜய தசமி, ஆயுத பூஜை, மற்றும் அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் வரும் கிறிஸ்துவப் பண்டிகையான கிறிஸ்துமஸ் நாட்களிலும் படங்களை வெளியிட திரையுலகினர் முயல்வார்கள். அந்த விடுமுறை நாட்களில் ரசிகர்கள் எப்படியாவது தியேட்டர்களுக்கு வருவார்கள் என்பது அவர்களது நம்பிக்கை. இந்த வருடத்தின் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை அக்டோபர் 4ம் தேதியன்றும், விஜய தசமி அக்டோபர் 5ம் தேதியன்றும் கொண்டாடப்பட உள்ளது.

அதற்கு சில நாட்கள் முன்பாகவே வார இறுதி விடுமுறை நாட்களை வைத்து தமிழில் செப்டம்பர் 29ம் தேதி தனுஷ் நடித்துள்ள 'நானே வருவேன்', செப்டம்பர் 30ம் தேதி மணிரத்னம் இயக்கியுள்ள சரித்திரப் படமான 'பொன்னியின் செல்வன்' படங்கள் வெளியாக உள்ளன. இந்தப் படங்கள் மட்டும்தான் தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஒன்றுக்கொன்று போட்டியிட உள்ளன.

ஆனால், ஹிந்தியில் முக்கியப் போட்டியாக விளங்க உள்ள படம் 'விக்ரம் வேதா'. தமிழில் வெளிவந்த படத்தை அதே பெயரில் ரீமேக் செய்துள்ளார்கள். இந்தப் படத்திற்கு ஹிந்தித் திரையுலகத்தில் ஒரு எதிர்பார்ப்புள்ளது. இப்படத்தை தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த கணவன், மனைவியான புஷ்கர் - காயத்ரி இயக்கியுள்ளார்கள்.

தெலுங்கில் அக்டோபர் 5ம் தேதியன்று வெளியாக உள்ள படம் 'காட் பாதர்' . சிரஞ்சீவி, நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தை மோகன் ராஜா இயக்கியுள்ளார். தமிழில் குறிப்பிடத்தக்க வெற்றிப் படங்களை இயக்கியவர் மோகன்ராஜா.

'பொன்னியின் செல்வன், நானே வருவேன்' இரண்டு படங்களுமே தெலுங்கில் வெளியாக உள்ளது. 'பொன்னியின் செல்வன்' கூடுதலாக கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்களுக்கும் மற்ற தமிழ் இயக்குனர்கள் இயக்கிய படங்கள் அங்கெல்லாம் போட்டியை ஏற்படுத்தியுள்ளன. யார் படம் அதில் முன்னணி பெறப் போகிறது என்பது விரைவில் தெரிந்துவிடும்.

மூலக்கதை