ஐதராபாத்தில் இன்று ‘பைனல்’ * கோப்பை வெல்லுமா இந்தியா | செப்டம்பர் 24, 2022

தினமலர்  தினமலர்
ஐதராபாத்தில் இன்று ‘பைனல்’ * கோப்பை வெல்லுமா இந்தியா | செப்டம்பர் 24, 2022

ஐதராபாத்: மூன்றாவது ‘டி–20’ போட்டியின் இன்று இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1–1 என சமநிலையில் உள்ளது. வெற்றியாளரை தீர்மானிக்கும் பைனல் போன்ற மூன்றாவது போட்டி இன்று ஐதராபாத்தில் நடக்கிறது.

நிலையற்ற பேட்டிங்

இந்திய அணியின் பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், கோஹ்லி என, மூவரும் கைகொடுக்கின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் யாராவது ஒருவர் மட்டும் தான் ஸ்கோர் செய்கிறார். 

மூவரும் சேர்ந்து சீரான பேட்டிங்கை வெளிப்படுத்தினால் நல்லது. கடந்த சில போட்டிகளில் ஏமாற்றி வரும் சூர்யகுமார் மீள வேண்டும். ஹர்திக் பாண்ட்யா விளாசல் தொடரலாம். இரண்டாவது போட்டியில் 2 பந்தில் 10 ரன் எடுத்த தினேஷ் கார்த்திக், பேட்டிங் செய்ய அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

பும்ரா ஆறுதல்

பும்ரா வருகை கடைசி கட்ட பந்துவீச்சுக்கு பலம் சேர்த்துள்ளது.  ‘டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்’ ஆன ஹர்ஷல் படேல், சரியான ‘லென்த், லைன்’ கிடைக்காமல் தடுமாறுகிறார். கடந்த இரு போட்டிகளில் 6 ஓவரில் 81 ரன் (சராசரி 13.50 ரன்) வாரி வழங்கினார். ஒரு விக்கெட்டும் வீழ்த்தவில்லை. சுழலில் சகால் தொடர்ந்து ஏமாற்றம் தருகிறார். அக்சர் மட்டும் நம்பிக்கை தருகிறார்.

பின்ச் பலம்

ஆஸ்திரேலிய அணிக்கு பேட்டிங்கில் கேப்டன் பின்ச், மாத்யூ வேட், கேமரான் கிரீன் என பலரும் கைகொடுக்கின்றனர். மேக்ஸ்வெல் ‘பார்ம்’ இல்லாமல் திணறுகிறார்.

பந்துவீச்சும் பலவீனமாக உள்ளது. கம்மின்ஸ், ஹேசல்வுட் என ‘சீனியர்கள்’ இருந்த போதும், சராசரியாக ஓவருக்கு 11 ரன்களை விட்டுத் தருகின்றனர். சுழலில் ஜாம்பா ஜொலிப்பது பலம்.

 

14

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் 25 ‘டி–20’ போட்டியில் மோதின. இந்தியா 14, ஆஸ்திரேலியா 10ல் வெற்றி பெற்றன. 1 போட்டி கைவிடப்பட்டது.

 

மழை வருமா

மூன்றாவது ‘டி–20’ போட்டி நடக்கும் ஐதராபாத்தில் இன்று மதியம் 2:00 மணி முதல் 4:00 மணி வரை இடியுடன் கூடிய மழை வர 41 சதவீத வாய்ப்புள்ளது. போட்டி நேரத்த்தில் வானம் மேகமூட்டமாக காணப்படும்.

 

மூலக்கதை