டோக்கியோ ஒலிம்பிக் பேட்மின்டன் ‘தடுப்பாட்டத்தில் பி.வி.சிந்து கவனம் செலுத்துவார்’ - பயிற்சியாளர் பார்க்-டெய்-சங் பேட்டி

தினகரன்  தினகரன்
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மின்டன் ‘தடுப்பாட்டத்தில் பி.வி.சிந்து கவனம் செலுத்துவார்’  பயிற்சியாளர் பார்க்டெய்சங் பேட்டி

டோக்கியோ: ‘‘பி.வி.சிந்துவின் தடுப்பாட்டம் மிகவும் பலவீனமாக இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக கிடைத்த கால அவகாசத்தில் அவர், தடுப்பாட்டத்தை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டார். வழக்கமாக ஆக்ரோஷமான தாக்குதல்களை நம்பி மட்டும், தன்னுடன் மோதும் வீராங்கனைகளை எதிர்கொள்ளும் அவர், இந்த ஒலிம்பிக்கில் கூடுதலாக தடுப்பாட்டத்திலும் கவனம் செலுத்துவார்’’ என்று பயிற்சியாளர் பார்க்-டெய்-சங் கூறியுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக டோக்கியோ சென்றுள்ள இந்திய வீரர்கள், வீராங்கனைகள் நேற்று முதல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மைதானங்களில் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் பயிற்சியாளர்களும் டோக்கியோ சென்றுள்ளனர். இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவும், சக வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் நேற்று டோக்கியோவில் உள்ள பேட்மிண்டன் பயிற்சி மைதானத்தில், இந்திய பேட்மிண்டன் பயிற்சியாளரான தென் கொரியாவை சேர்ந்த பார்க்-டெய்-சங்கின் வழிகாட்டுதலின் கீழ், பயிற்சி எடுத்துக் கொண்டார். கடந்த 2016ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் போட்டியில் சிந்து, வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் அவர் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினிடம் தோல்வியடைந்தார். காயம் காரணமாக நடப்பு சாம்பியன் கரோலினா மரின், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவில்லை. நடப்பு உலக சாம்பியனான பி.வி.சிந்து, டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் குரூப் ‘ஜே’யில் இடம் பெற்றுள்ளார். அவர் தனது முதல் போட்டியில் வரும் 25ம் தேதி, இஸ்ரேல் வீராங்கனை செனியா போலிகர்போவாவை எதிர்கொள்கிறார். தற்போது தரவரிசையில் சிந்து, 7ம் இடத்திலும், செனியா போலிகர்போவா  58ம் இடத்திலும் உள்ளனர். குரூப் ‘ஜே’யில் ஹாங்காங் வீராங்கனை செங் யான் யீயும் தரவரிசையில் 34ம் இடத்தில் உள்ள இடம் பெற்றுள்ளார். இவர்கள் 2 பேரையும் சிந்து, எளிதில் வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடுவார்.16 வீராங்கனைகள் மோதும் அடுத்த சுற்றில் டென்மார்க் வீராங்கனை மியா பிளிச்பெல்ட்டுன் சிந்து, மோத நேரிடலாம். தரவரிசையில் தற்போது 6ம் இடத்தில் உள்ள மியா, சிந்துவுக்கு கடும் சவாலாக இருப்பார். ஆனால் இதுவரை இருவரும் மோதிய போட்டிகளில் சிந்துவே அதிகமுறை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காலிறுதியில் சிந்து, ஜப்பான் வீராங்கனை யாமகுச்சி அகானேவை எதிர்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அவரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினால், தரவரிசையில் தற்போது 2ம் இடத்தில் உள்ள தைவான் வீராங்கனை டெய் சூ யிங்கை சிந்து எதிர்கொள்ள வேண்டும். இருப்பினும் இந்த ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் வாய்ப்புள்ள வீராங்கனைகளில் ஒருவராக பி.வி.சிந்தும் இடம் பெற்றுள்ளார். நேற்று பயிற்சிக்கு பின்னர், சிந்துவின் பயிற்சியாளர் பார்க்-டெய்-சங் கூறுகையில், ‘‘சிந்துவின் தடுப்பாட்டம் பலவீனமாக இருந்தது என்பது உண்மைதான். ஆக்ரோஷமான தாக்குதல்களையே அவர் தனது ஆயுதங்களாக வைத்துள்ளார். ஆனால் அவருடைய பலவீனத்தை அறிந்து, அதை சரி செய்வதற்கான பயிற்சிகளை அவர் எடுத்துக் கொண்டார். கொரோனா பரவல் காரணமாக கிடைத்த கால அவகாசத்தை அவர், இதற்காக பயன்படுத்திக் கொண்டார். இந்த முறை அவரது ஆட்டத்திறனில் மேம்பட்ட அணுகுமுறைகளை நீங்கள் நிச்சயம் எதிர்பார்க்கலாம். வழக்கமான அவரது ஆக்ரோஷமான தாக்குதல்களும் இருக்கும். அதனுடன் தடுப்பாட்டத்திலும் அவர் கவனம் செலுத்துவார். இந்த ஒலிம்பிக்கிலும் அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்’’ என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை