கொழும்புவில் இன்று 2வது ஒருநாள் போட்டி: தொடரை வெல்ல இந்தியா முனைப்பு..! பதிலடி கொடுக்குமா இலங்கை?

தினகரன்  தினகரன்
கொழும்புவில் இன்று 2வது ஒருநாள் போட்டி: தொடரை வெல்ல இந்தியா முனைப்பு..! பதிலடி கொடுக்குமா இலங்கை?

கொழும்பு: இலங்கை அணியுடன் இன்று 2வது ஒருநாள் போட்டியில் மோதும் இந்திய அணி, தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில்  அபாரமாக வென்று 1-0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில் இந்த 2 அணிகளும் மோதும் 2வது ஒருநாள் போட்டி, கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் பொறுப்புடன் விளையாடினர். வீரர்களிடையே ஒருங்கிணைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது முதல் ஆட்டத்தில் அழகாக வெளிப்பட்டது. இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 262 ரன் என்ற நல்ல ஸ்கோரை தான் எட்டியிருந்தது. அந்த அணியின் வனிந்து, இசுரு ஆகியோரை தவிர மற்றவர்கள் இரட்டை இலக்கத்தில் ரன் குவித்திருந்தனர். ஆனாலும், துல்லியமாகப் பந்துவீசிய க்ருணால், குல்தீப், தீபக் சாகர், சாஹல் ஆகியோர் இலங்கை அணி சவாலான பெரிய ஸ்கோரை அடிக்க விடாமல் கட்டுப்படுத்தினர். இந்திய அணி துரத்தலின்போது 50 ஓவர்  நெருக்கத்தில்  தான் வெற்றி இலக்கை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய  வீரர்கள்  கேப்டன் தவான், பிரித்வி ஷா, இஷான் கிஷண்,  மணீஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ்  என எல்லோரும் வெளுத்து வாங்கினர். அதனால் இந்தியா 80 பந்துகள் மிச்சிமிருந்த நிலையில் இலக்கை எட்டி  அபார வெற்றி பெற்றது. எனவே இன்று நடைபெறும் 2வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியில் பெரிய மாற்றம்  இருக்காது. அதே அணி மீண்டும் களமிறங்கக் கூடும். பந்து வீச்சில் இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்த விரும்பினால் ஓரிரு மாற்றம் இருக்கலாம். இலங்கை அணியும் சில மாற்றங்களுடன் களமிறங்கக் கூடும்.  புதுமுக வீரர்கள் அறிமுகமாகவும் வாய்ப்பு உள்ளது.  பந்து வீச்சாளர்களில் கட்டாயம் மாற்றமிருக்கும்.  தொடரை வெல்ல இந்தியாவும், பதிலடி கொடுக்க இலங்கை அணியும் வரிந்துகட்டுவதால் இன்றைய ஆட்டம் சுவாரசியமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

மூலக்கதை