இம்மாதத்தில் ‘டிவி’ விலை 3 – 4 சதவீதம் அதிகரிக்கும்

தினமலர்  தினமலர்
இம்மாதத்தில் ‘டிவி’ விலை 3 – 4 சதவீதம் அதிகரிக்கும்

புதுடில்லி:நடப்பு மாதத்தில், ‘டிவி’ விலை, 3 – 4 சதவீதம் வரை அதிகரிக்கும் என, ‘டிவி’ தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.‘டிவி’ தயாரிப்புக்கு தேவைப்படும் பேனல்கள் விலை அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து செலவு அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக, இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாததாக இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

அப்படி விலை உயர்த்தும்பட்சத்தில், கடந்த மூன்று மாதங்களில், இது, இரண்டாவது விலை அதிகரிப்பாக இருக்கும்.இதற்கு முன், கடந்த ஏப்ரலில், கடல் வழி போக்குவரத்து மற்றும் உள்நாட்டு போக்குவரத்துக்கான செலவு அதிகரித்ததை அடுத்து, ‘டிவி’களின் விலை உயர்த்தப்பட்டது.

இது குறித்து, ‘பானாசோனிக் இந்தியா’ நிறுவனத்தின், தெற்கு ஆசியாவின் தலைவர் மணிஷ் ஷர்மா, “நாங்களும் சில தயாரிப்புகளின் விலையை 3 – 4 சதவீதம் அளவுக்கு அதிகரிக்க எண்ணியுள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளார். ‘ஹேயர் அப்ளையன்ஸ் இந்தியா’வின் தலைவர் எரிக் பிராகன்சா இது குறித்து பேசும்போது, “டிவி பேனல்கள் விலை மிகவும் அதிகரித்துவிட்டது. “இதனால், விலையை அதிகரிப்பதை தவிர யாருக்கும் வேறு வழி இல்லை.

அதிகம் விற்பனை ஆகும், 32 அங்குலம் மற்றும் 42 அங்குல ‘டிவி’களுக்கான பேனல் விலை அதிகரித்துள்ளது. எனவே இந்த டிவிகளின் விலை அதிகரிக்கும்,” என்று தெரிவித்துள்ளார். இந்த ஓபன் செல் பேனல், ஒரு டிவி தயாரிப்பில், 70 சதவீத பங்கு வகிக்கிறது. பெரும்பாலான தயாரிப்பாளர்கள், பேனல்களை, சீனாவிலிருந்து தான் இறக்குமதி செய்து கொள்கிறார்கள்.

மூலக்கதை