பங்குதாரர்கள் குறித்த செய்தியால் அதானி பங்குகள் சரிவு

தினமலர்  தினமலர்
பங்குதாரர்கள் குறித்த செய்தியால் அதானி பங்குகள் சரிவு

புதுடில்லி : அதானி குழுமம் குறித்து வெளியான செய்தியால், அந்நிறுவன பங்குகள், நேற்று காலை வர்த்தகத்தில், 25 சதவீதம் அளவுக்கு கடும் சரிவைக் கண்டன.

என்.எஸ்.டி.எல்., எனும், தேசிய பத்திரங்கள் வைப்பு நிறுவனம், அதானி குழுமத்தில் முதலீட்டை மேற்கொண்டிருக்கும், 3 அன்னிய முதலீட்டாளர்களின் கணக்குகளை முடக்கிவிட்டதாக செய்திகள் வெளியாகவும், அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்தன.இதையடுத்து, அதானி குழுமம், இச்செய்தியை மறுத்து, அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து, பங்குகள் விலை சிறிது மேம்பட்டது. வர்த்தக இறுதியில், ‘அதானி என்டர்பிரைசஸ்’ நிறுவனத்தின் பங்கு விலை, 6.26 சதவீத சரிவுடன், 1,501 ரூபாயாக முடிவுற்றது. இதேபோல், ‘அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம்’ பங்கு விலையும், 8.36 சதவீத சரிவைக் கண்டது.
அதானி குழுமம் தன்னுடைய அறிக்கையில், ‘முதலீட்டாளர் சமூகத்தை வேண்டுமென்றே தவறாக வழிநடத்த செய்யப்பட்ட அப்பட்டமான பிழையாகும். ‘இது, முதலீட்டாளர்களுக்கு ஈடு செய்ய முடியாத பொருளாதார இழப்பை ஏற்படுத்தி இருப்பதுடன், குழுமத்தின் நற்பெயருக்கும் களங்கம் விளைவித்துள்ளது’ என தெரிவித்துள்ளது.

மூலக்கதை