ரிஷாப் பன்ட் ‘100’: தினேஷ் கார்த்திக் நம்பிக்கை | ஜூன் 08, 2021

தினமலர்  தினமலர்
ரிஷாப் பன்ட் ‘100’: தினேஷ் கார்த்திக் நம்பிக்கை | ஜூன் 08, 2021

புதுடில்லி: ‘‘இந்தியாவின் ரிஷாப் பன்ட் 100 டெஸ்டில் விளையாடுவார்,’’ என, தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷாப் பன்ட் 23. இவர், இதுவரை 20 டெஸ்ட், 18 ஒருநாள், 33 சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியில் விளையாடி உள்ளார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தொடரில் விக்கெட் கீப்பர், பேட்டிங்கில் அசத்திய இவர், இந்திய அணி கோப்பை வெல்ல உதவினார்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் கூறியது: சமீபத்திய போட்டிகளில் ரிஷாப் பன்ட் சிறப்பாக விளையாடினார். குறிப்பாக நெருக்கடியான போட்டிகளில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி தேடித்தந்தார். சர்வதேச போட்டி, ஐ.பி.எல்., என அனைத்திலும் அசத்துகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஐ.பி.எல்., ‘எலிமினேட்டர்’ போட்டியில் தனிநபராக போராடி டில்லி அணிக்கு வெற்றி தேடித்தந்தார். இதுபோன்ற முக்கியமான போட்டிகளில், நெருக்கடியான நேரத்தில் ரன் எடுக்கும் வழிகளை தெரிந்து வைத்துள்ளார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவரது பேட்டிங், கீப்பிங் சிறப்பாக இருந்தது.

இந்திய அணியில் ரிஷாப் பன்ட், தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார் என்பதில் சந்தேகம் இல்லை. இவர், நிச்சயமாக 100 டெஸ்டில் விளையாடுவார். அதற்கான தகுதி இவரிடம் உண்டு. இதேபோல நிறைய ஒருநாள், ‘டுவென்டி–20’ போட்டிகளிலும் விளைளயாடுவார். இந்திய அணியில் மிக உயர்ந்த இடத்துக்கு செல்வார்.

இவ்வாறு கார்த்திக் கூறினார்.

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோரே கூறுகையில், ‘‘உலக டெஸ்ட் பைனல், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு ரிஷாப் பன்ட் முக்கிய பங்குவகிப்பார். மூன்றாவது முறையாக இங்கிலாந்து வந்துள்ள இவர், இங்குள்ள ஆடுகளத்தின் தன்மையை நன்கு அறிந்திருப்பார். எனவே இவர், டெஸ்டில் சதம் அடிப்பது உறுதி. இதேபோல விக்கெட் கீப்பிங்கிலும் கலக்குவார்,’’ என்றார்.

மூலக்கதை