வீரர் தடையில் தலையிடுவது சரியா * இங்கிலாந்து பிரதமருக்கு எதிர்ப்பு | ஜூன் 09, 2021

தினமலர்  தினமலர்
வீரர் தடையில் தலையிடுவது சரியா * இங்கிலாந்து பிரதமருக்கு எதிர்ப்பு | ஜூன் 09, 2021

புதுடில்லி: ‘‘ராபின்சனுக்கு விதிக்கப்பட்ட தடையில் தலையிடக் கூடாது,’’ என இந்திய அணி முன்னாள் வீரர் பரூக் இன்ஜினியர் தெரிவித்தார்.

இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ராபின்சன் 27. கடந்த 8 ஆண்டுக்கு முன் இனவெறிக்கு ஆதரவாகவும், பெண்களுக்கு எதிராகவும் சர்ச்சைக்குரிய முறையில் ‘டுவிட்டர்’ வெளியிட்டார். இதற்கு வருத்தம் தெரிவித்த போதும், ராபின்சன் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு (இ.சி.பி.,) தடை விதித்தது. இதற்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து இந்திய அணி முன்னாள் விக்கெட் கீப்பர் பரூக் இன்ஜினியர் 83, கூறியது:

ராபின்சன் விஷயத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்ட கருத்து முட்டாள்தனமானது. ராபின்சன் தவறு செய்துள்ளார், அதற்கான விலையை அவர் கொடுக்க வேண்டும். இவர் தண்டிக்கப்பட வேண்டியவர் தான். இவ்விஷயத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு (இ.சி.பி.,) சரியான நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் மற்றவர்கள் இதுபோன்ற தவறுகளை செய்ய மாட்டர். 

18 வயதில் தனிநபர் பொறுப்புகள் இருக்கும். இந்த நேரத்தில் தவறு செய்து விட்டேன என தப்பிக்க பார்க்கக் கூடாது. கிரிக்கெட் வீரர்கள் தடையில் இருந்து நழுவினால் மோசமான சூழல் ஏற்படும். இவர்கள் எல்லாம் ஆசிய மக்களான நமக்கு எதிராக அனைத்து வித கருத்துகளையும் தெரிவிப்பர். இதை துவக்கத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். 

இதுபோன்றவர்களுக்கு வாழ்நாள் தடை வேண்டும் என சொல்லவில்லை. அதிகப்படியான அபராதம் விதித்து தொல்லை தர வேண்டும். டெஸ்ட் தொடர், முதல் தர போட்டிகளிலும் ‘சஸ்பெண்ட்’ செய்ய வேண்டும். ஏனெனில் நான் கவுன்டி போட்டியில் விளையாட சென்ற போது, இதுபோன்ற இனவெறி பேச்சுகளை இரு முறை எதிர்கொண்டேன். பேட்டிங்கிலும், விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு அவர்களுக்கு பதிலடி கொடுத்தேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

 

மார்கன், பட்லரிடம் விசாரணை

ராபின்சனை தொடர்ந்து இங்கிலாந்து வீரர்கள் தங்களது சமூகவலைதளத்தில் முன்பு வெளியிட்ட செய்திகள் குறித்து இ.சி.பி., விசாரிக்கிறது. இதில் முதலில் ஆண்டர்சன் சிக்கினார். இதனிடையே கடந்த 2018 ஐ.பி.எல்., தொடரில் இந்தியர்களின் ஆங்கிலம் குறித்து கேலியாக ‘டுவிட்டர்’ வெளியிட்ட இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன், பட்லர் செயல் குறித்தும் இ.சி.பி., விசாரித்து வருகிறது. 

மூலக்கதை