இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்: அகார்கர் எச்சரிக்கை | ஜூன் 10, 2021

தினமலர்  தினமலர்
இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்: அகார்கர் எச்சரிக்கை | ஜூன் 10, 2021

புதுடில்லி: ‘‘உலக டெஸ்ட் பைனலில் நியூசிலாந்து வேகம், இங்கிலாந்து தட்பவெப்பநிலை போன்றவை இந்திய வீரர்களுக்கு சவாலாக இருக்கும்,’’ என, அகார்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரும் ஜூன் 18ல் சவுத்தாம்ப்டனில் துவங்குகிறது. இப்போட்டியில் இந்திய வீரர்கள் சந்திக்கவுள்ள சவால்கள் குறித்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அஜித் அகார்கர் கூறியது: உலக டெஸ்ட் பைனல் இந்திய வீரர்களுக்கு சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில் இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தொல்லையாக இருப்பர். டிரண்ட் பவுல்ட், டிம் சவுத்தீ, நீல் வாக்னர், ஒவ்வொரு பந்தையும் வித்தியாசமாக வீசுவர். இவர்களது பந்தை கவனமாக எதிர்கொள்ள வேண்டும். உயரமான கைல் ஜேமிசன் வேறு விதமாக நெருக்கடி கொடுப்பார்.

தவிர, இங்கிலாந்து தட்பவெப்பநிலை, ஆடுகளத்தின் தன்மை போன்றவை இந்திய வீரர்களுக்கு சவாலாக இருக்கும். ஏனெனில் இங்கிலாந்தில் நிலவும் தட்பவெப்பநிலை, சொந்த மண்ணில் இருப்பது போன்று இருக்கும் என்பதால், அது நியூசிலாந்து வீரர்களுக்கு சாதகமாக இருக்கும். ஆடுகளத்தின் தன்மை வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இதனால் ‘டியூக்’ வகை பந்து அதிகமாக ‘சுவிங்’ ஆகும்.

இப்போட்டிக்கு முன், இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடுவது நியூசிலாந்துக்கு சிறந்த பயிற்சியாக அமையும். ஆனால் இந்திய அணி, கடைசியாக சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அதன்பின் எவ்வித போட்டியிலும் விளையாடவில்லை. ஆஸ்திரேலியாவில் டெஸ்டில் விளையாடியதற்கும், இங்கிலாந்து மண்ணில் விளையாடுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. எனவே இப்போட்டிக்கு இந்திய வீரர்கள் எப்படி தயாராகிறார்கள் என்பதில் தான் வெற்றி வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அகார்கர் கூறினார்.

மூலக்கதை