மொத்தவிலை பணவீக்கம் இரட்டை இலக்க உயர்வு

தினமலர்  தினமலர்
மொத்தவிலை பணவீக்கம் இரட்டை இலக்க உயர்வு

புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரல் மாதத்தில், இரட்டை இலக்கத்தில் அதிகரித்து, 10.49 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, இதுவரை காணாத அதிகரிப்பாகும்.


இதற்கு, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் தயாரிப்பு பொருட்கள் விலை அதிகரிப்பு ஆகியவை முக்கிய காரணமாக அமைந்துள்ளது.மேலும், கடந்த ஆண்டு ஏப்ரலில் மிகக் குறைவாக இருந்ததும், ஒப்பீட்டளவில் மிகவும் அதிகரிக்க காரணமாக உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில், மைனஸ் 1.57 சதவீதமாக இருந்தது.கடந்த மார்ச் மாதத்தில், மொத்தவிலை பணவீக்கம், 7.39 சதவீதமாக இருந்தது. தொடர்ந்து நான்கு மாதங்களாக, மொத்தவிலை பணவீக்கம் அதிகரித்து வருகிறது.கடந்த ஏப்ரலில், கச்சா எண்ணெய், தயாரிப்பு பொருட்கள் விலையேற்றம் கண்டுள்ளன.


உணவு பொருட்கள் பிரிவில், பணவீக்கம், 4.92 சதவீதமாக உள்ளது. குறிப்பாக, புரதச் சத்து மிகுந்த முட்டை, இறைச்சி, மீன் ஆகிய வற்றின் விலை அதிகரித்துள்ளது.. பழங்களின் பணவீக்கம், 27.43 சதவீதம் அதிகரித்துள்ளது.கடந்த ஏப்ரலில், சில்லரை விலை பணவீக்கம், 4.29 சதவீதமாக, ரிசர்வ் வங்கியின் சவுகரியமான வரம்பிற்குள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை