புதிய டெஸ்ட் கேப்டன் யார்: ரிஷாப் பக்கம் கவாஸ்கர் | ஜனவரி 16, 2022

தினமலர்  தினமலர்
புதிய டெஸ்ட் கேப்டன் யார்: ரிஷாப் பக்கம் கவாஸ்கர் | ஜனவரி 16, 2022

புதுடில்லி: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவிக்கு ரோகித், ரிஷாப், ராகுல் இடையே போட்டி காணப்படுகிறது.

தென் ஆப்ரிக்கா சென்ற கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1–2 என இழந்தது. இதனையடுத்து டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோஹ்லி திடீரென விலகினார். இந்நிலையில், புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற விவாதம் எழுந்துள்ளது.

 

ரோகித் வாய்ப்பு: தற்போதுள்ள நிலையில் இப்பதவிக்கு துவக்க வீரர்களான ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதில் ரோகித் சர்மா, கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் சமீபத்தில் இவரை, ஒருநாள், ‘டி–20’ போட்டி அணிகளுக்கு கேப்டனாக இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) நியமித்திருந்தது. எனவே இவரே, மூன்று வித அணிகளுக்கும் கேப்டனாக செயல்பட பி.சி.சி.ஐ., விரும்பலாம். தற்போது காயத்தால் ஓய்வில் உள்ள ரோகித் சர்மா, விரைவில் மீண்டு வரும் பட்சத்தில், அடுத்த மாதம் சொந்த மண்ணில் நடக்கவுள்ள இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கேப்டனாக செயல்படலாம்.

 

ராகுல் எதிர்பார்ப்பு: தென் ஆப்ரிக்க டெஸ்ட் தொடருக்கு துணை கேப்டனாக ரோகித் அறிவிக்கப்பட்டார். ஆனால் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியதால், மற்றொரு துவக்க வீரர் லோகேஷ் ராகுல் துணை கேப்டனாக தேர்வானார். ஜோகனஸ்பர்க்கில் நடந்த இரண்டாவது டெஸ்டில் முதுகுப் பகுதி காயத்தால் கோஹ்லி விலகியதால், ராகுல் அணியை வழிநடத்தினார். தவிர, அடுத்த இரு ஆண்டுகளில் இரண்டு உலக கோப்பை தொடர்கள் நடக்கவுள்ளன. எனவே ரோகித் சர்மாவின் பணிச் சுமையை குறைக்க விரும்பினால் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக ராகுல் நியமிக்கப்படலாம்.

 

கவாஸ்கர் கணிப்பு: இந்நிலையில் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், டெஸ்ட் அணிக்கு கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷாப் பன்ட் நியமிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில், ‘‘இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவிக்கு ரிஷாப் பன்ட் பொருத்தமாக இருப்பார். ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணியை சிறப்பாக வழிநடத்தினார். மும்பை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து பாண்டிங் விலகிய பின் ரோகித் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன்பின் ரோகித் சர்மாவின் பேட்டிங் சிறப்பாக அமைந்தது. இதுபோல ரிஷாப் பன்ட்டிற்கு வழங்கப்படும் பொறுப்பு, அவரது பேட்டிங்கை வலுப்படுத்தும். இதற்கான தகுதி அவரிடம் உள்ளது,’’ என்றார்.

போதிய அனுபவம் இல்லாத ரிஷாப் பன்ட், துணை கேப்டனாக அறிவிக்கப்படலாம்.

 

இவர்களை தவிர, ஒருநாள் போட்டி அணியின் துணை கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா, டெஸ்ட் அணியின் முன்னாள் துணை கேப்டன் அஜின்கியா ரகானே பெயரும் கேப்டன் பதவிக்கு பரிந்துரைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை