டெர்ம் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை உயர்கிறது?

தினமலர்  தினமலர்
டெர்ம் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை உயர்கிறது?

டிசம்பர்- ஜனவரி மாத காலத்தில் டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கான பிரீமியம் தொகை உயரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பாலிசிதாரர்கள் என்ன செய்ய வேண்டும்

.நிதி உலகில் இந்த மாதம் முதல் பல்வேறு முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இந்த பட்டியலில் டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கான பிரீமியம் கட்டணமும் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கொரோனா பாதிப்பு காலத்தில் இழப்பு காரணமாக கிளைம்கள் அதிகரித்ததால் ஆயுள் காப்பீடு பாலிசிக்கான பிரீமியம் தொகை உயர்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில், டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கான பிரீமியம் தொகையும், டிசம்பர் – ஜனவரி மாத வாக்கில் உயரலாம் என கூறப்படுகிறது. இந்த உயர்வு, 25 சதவீதம் வரை கணிசமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மறுகாப்பீடு உயர்வு


ஆயுள் காப்பீடு வகை பாலிசிகளில் ஒன்றாம் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்கள் துாய காப்பீடு திட்டங்களாக அமைகின்றன. டெர்ம் காப்பீடு பாலிசிதாரருக்கு எதிர்கால பாதுகாப்பை மட்டும் அளிக்கின்றன. முதலீடு அம்சம் கொண்ட பாலிசிகள் தரும் பலன் போன்றவை இல்லாமல், காப்பீடு பாதுகாப்பு மட்டும் அளிப்பதால் இவற்றுக்கான பிரிமியம் தொகையும் குறைவாகவே இருக்கின்றன.

பாலிசிதாரர் இறக்கும் நிலையில் அவர்கள் குடும்பத்திற்கான பாதுகாப்பு வழங்குவது இந்த பாலிசியின் நோக்கமாக அமைகிறது. காப்பீட்டை முதலீடு நோக்கில் அணுக கூடாது என வலியுறுத்தும் நிதி வல்லுனர்கள் போதுமான டெர்ம் காப்பீடு இருப்பது அவசியம் என்கின்றனர். பாலிசிதாரர் பாலினம், வயது, வருமானம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் டெர்ம் பாலிசி பிரீமியம் நிர்ணயிக்கப்படுகிறது.

தனிநபர்கள் காப்பீடு பெறுவது போலவே காப்பீடு நிறுவனங்களும் தங்கள் வர்த்தகம் தொடர்பான காப்பீடு பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளன. காப்பீடு நிறுவனங்களுக்கு காப்பீடு வழங்கும் நிறுவனங்கள் மறுகாப்பீடு நிறுவனங்கள் என குறிப்பிடப்படுகின்றன. கொரோனா பாதிப்பு காரணமாக காப்பீடு நிறுவனங்கள் அதிக சுமையை உணர்வதால், மறுகாப்பீடு நிறுவனங்களும் காப்பீடு நிறுவனங்களுக்கான காப்பீடு தொகையை உயர்த்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்ன பாதிப்பு?

சர்வதேச மறுகாப்பீடு நிறுவனங்கள் தொகையை உயர்த்த இருப்பதால், இந்த விலை உயர்வை காப்பீடு நிறுவனங்களும் பிரீமியம் தொகையை உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.குழு பாலிசிகளில் ஏற்கனவே இந்த உயர்வு சேர்க்கப்பட்டு விட்டதாக காப்பீடு வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். தனிநபர் பாலிசிகளை பொருத்தவரை பிரீமியம் உயர்வுக்கு திட்டமிட்டுள்ள காப்பீடு நிறுவனங்கள் இதற்காக காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியை கோரியிருப்பதாக தெரிகிறது. ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்ததும் பாலிசி பிரீமியம் உயர்த்தப்படலாம் என்கின்றனர்.

இந்த உயர்வு இம்மாதம் அல்லது அடுத்த மாதம் செயலுக்கு வரலாம் என்கின்றனர். இந்தியாவில் டெர்ம் பாலிசி பிரீமியம் குறைவாக இருப்பதால் இம்முறை பிரீமியம் தொகை உயர்வு கணிசமாக இருக்கலாம் என்கின்றனர்.இந்த சூழலில் டெர்ம் பாலிசி பெற திட்டமிட்டுள்ளவர்கள் பிரீமியம் தொகை உயர்வுக்கு முன்பாக பாலிசியை பெறுவது ஏற்றதாக இருக்கும் என்கின்றனர்.

இதே போல, அதிக காப்பீடு தேவை என்பதற்காக கூடுதல் பாலிசி எடுக்க விரும்புகிறவர்களும் உடனடியாக செயல்படுவது ஏற்றதாக இருக்கும். பொதுவாக இந்தியர்களின் காப்பீடு போதிய அளவு இல்லாததாக கருதப்படும் நிலையில் காப்பீட்டை அதிகரிப்பது அவசியமாகிறது. வயது போன்ற அம்சங்களை காரணமாக கொள்ளாமல், போதுமான காப்பீடு பெறுவது அவசியம் என்று வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.

மூலக்கதை