ஆயிரம் சந்தேகங்கள் :‘ஒமைக்ரான்’ பரவும் நிலையில்பங்குச் சந்தை பக்கம் போகலாமா?

தினமலர்  தினமலர்
ஆயிரம் சந்தேகங்கள் :‘ஒமைக்ரான்’ பரவும் நிலையில்பங்குச் சந்தை பக்கம் போகலாமா?

என் தந்தை, கனரா வங்கியின் 100 ஷேர்களை, அதன் துவக்கத்தில் வாங்கினார். அச்சு வடிவிலேயே அது இருக்கிறது. இப்போது, நானும் என் மூத்த சகோதரியும் மட்டுமே இருக்கின்றோம். என் சகோதரியும் எனக்கு இந்த ஷேர்களை அளிக்க வாய்மொழி சம்மதம் தெரிவித்துள்ளார். பங்குகளை நிர்வகித்து வந்த ‘கார்வி’ அமைப்பும் தற்போது செயல்படவில்லை. யாரை அணுக வேண்டும்?
நா.வெங்கடாச்சலம், மதுரை-.
கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட்டை, [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்புகொண்டு, அச்சு வடிவில் இருப்பதை, டீமேட் வடிவில் மாற்றிக்கொள்ளும் வழி கேளுங்கள். கூடவே, உங்கள் பெயரில் அந்த ஷேர்களை மாற்றிக்கொள்வதற்கான ஆவணங்கள் என்னென்ன சமர்ப்பிக்க வேண்டும் என்பதையும் தெரிந்துகொண்டு அதன்படி செய்யுங்கள்.
ஐ.ஓ.பி., கணக்கு வழியாக , தங்கக் கடன் பத்திரம் வாங்கினேன். அதற்கான வட்டி இரு தடவை கிரெடிட் ஆனது. இந்தக் கணக்கை மூடினால், வட்டி கிரெடிட் ஆவது என்ன ஆகும்? எஸ்.பி.ஐ.,யில் கணக்கு இருக்கிறது. அதற்கு மாற்றிக்கொள்ளலாமா?
எஸ்.கண்ணன், திருவல்லிக்கேணி.
‘டீமேட்’ முறையில் வாங்காமல், காகித பத்திரமாக வாங்கியிருப்பதாக நான் புரிந்து கொள்கிறேன். ‘டீமேட்’ என்றால் கவலை இல்லை. பிசிக்கல் முறையிலும் வங்கிக் கணக்கு விபரங்களை மாற்றிக்கொள்ள முடியும். அதற்கு நீங்கள், தங்கக் கடன் பத்திரம் வாங்கிய ஐ.ஓ.பி., வங்கியின் ‘நோடல்’ அலுவலரை ([email protected]) அணுகி, புதிய வங்கி விபரங்களைக் கொடுத்து, மாற்றித் தரச் சொல்லுங்கள்.
இது ஒரு பிரச்னையாக இருக்கக்கூடாது. ஒருவேளை தீர்வு கிடைக்கவில்லை என்றால், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள்.
‘ஒமைக்ரான்’ ஆட்டம் பங்குச் சந்தையிலும் தென்படுகிறதே? முதலீடு செய்ய உகந்த நேரமா?
எல்.சக்ரபாணி, விருகம்பாக்கம்.
வெளிநாடுகளில் இருந்து வரும் செய்திகளைப் பார்க்கும்போது, ‘ஒமைக்ரான்’, இந்தியா உட்பட பல நாடுகளின் பங்குச் சந்தைகளில், ஒரு ஆட்டம் ஆடிவிட்டுத் தான் ஓயும் போலிருக்கிறது. உபரி பணம் வைத்திருப்பவர்களுக்கும், துணிவு இருப்பவர்களுக்கும் இது நல் வாய்ப்பு தான். பங்கு விலைகள் தரை தட்டும் என்று காத்திருக்க வேண்டாம்.
பல ஆண்டுகளாக இயங்கும் தரமான நிறுவனங்களின் பட்டியலை வைத்துக்கொண்டு காத்திருங்கள். உங்கள் பக்கம் அதிர்ஷ்ட அலை வீசக்கூடும்.
என் தாய் பெயரில் வங்கியில் போட்டு இருந்த பிக்சட் டெபாசிட்டை,கடந்த 3 ஆண்டுகளாக புதுப்பிக்காமல் விட்டு விட்டோம். தானாகவே புதுப்பிக்கப்பட்டுவிடும் என்று விட்டு விட்டோம். தற்போது தாயார் மரணம் அடைந்துவிட்டார். ஒரு வைப்பு நிதியில் என் பெயர் நாமினி ஆக உள்ளது. இன்னொன்றில் நாமினி போடவில்லை. இந்த 2 வைப்பு நிதியையும் வட்டி இழப்பு இல்லாமல் புதுப்பிக்க முடியுமா?
நாகராஜன், கோவை.
வட்டி இழப்பு இருக்கவே செய்யும். இந்திய ரிசர்வ் வங்கி, புதுப்பிக்கப்படாத வைப்பு நிதி விஷயத்தில் திருத்தம் செய்து உள்ளது. அதன்படி, தானாகவே வைப்பு நிதி புதுப்பிக்கப்படாது. புதுப்பிக்கப்படாமல், அப்படியே வங்கியில் இருக்கும் தொகைக்கு, வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி வழங்கப்பட மாட்டாது. மாறாக, சாதாரண சேமிப்புக் கணக்குக்கு வழங்கப்படும் வட்டியே வழங்கப்படும். உங்கள் விஷயத்தில், நீங்கள் நாமினியாக இருக்கும் வைப்பு நிதியில், அந்தப் பணத்தை உங்கள் பெயருக்கு மாற்றிக்கொண்டு, புதிய எப்.டி., போடலாம்.
நாமினேஷன் பதிவு செய்யாத எப்.டி.,யில், உங்கள் தாயின் இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்ற ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்தே, அந்தப் பணத்தைக் கோர முடியும்.
கடந்த 1999ல், 3 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய வீட்டை, செப்டம்பர் 2021ல், 27 லட்சம் ரூபாய்க்கு விற்றேன். மூலதன ஆதாய வருமா? அதைத் தவிர்க்க என்ன வழி? அடுத்த ஓராண்டுக்குள் இன்னொரு வீடு வாங்கும் திட்டம் உள்ளது.
முனீஸ்வரன், மதுரவாயல்.
நீண்ட கால மூலதன ஆதாய வரி கூட உங்களுக்கு வராது. இண்டக்சேஷனைக் கணக்கிட்டால், இன்றைக்கு நீங்கள் வீட்டை விற்பனை செய்த விலை, வாங்கிய கால மதிப்பைவிடக் குறைவாகவே உள்ளது. அதனால், நீண்ட கால மூலதன நஷ்டமே கோர முடியும். நல்ல ஆடிட்டர் ஒருவரைக் கலந்து ஆலோசியுங்கள்.
நான் பவர் ஏஜன்ட் ஒருவரிடமிருந்து, வீட்டு மனை ஒன்றை வாங்கினேன். பவர் பத்திரத்திலும், என் கிரய பத்திரத்திலும் மற்றும் அவரது ஆதாரிலும் அவரது பெயர், ஒரே ஒரு இனிஷியலுடன் இருக்கிறது. ஆனால், அவர் கையெழுத்து போடும்போது மட்டும், இரு இனிஷியலுடன் கையெழுத்து இடுவது வழக்கமாம். அதனால், பவர் பத்திரத்திலும், என்னுடைய கிரயப் பத்திரத்திலும் அவரது கையெழுத்து இரண்டு இனிஷியலுடன் உள்ளது. இந்த பெயர் மற்றும் கையெழுத்து வேறுபாடு, ஏதேனும் பிரச்னை ஆக வாய்ப்புள்ளதா?
ரேவதி, மதுரை.
இந்த ‘வழக்கமாம்’ என்பதெல்லாம் எந்த ஆவணத்திலும் செல்லாது. ஆதாரில் என்ன பெயர் இருக்கிறதோ, அது தான் பேசும். எதற்குச் சிக்கல்? நீங்கள் வீட்டு மனை வேறு வாங்கி இருக்கிறீர்கள். நல்ல வழக்கறிஞரைப் பார்த்து, எப்படி உங்கள் ஆவணங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமோ, அப்படி செய்துகொள்ளுங்கள். அதுதான் பாதுகாப்பு.
தங்க பத்திரத்தில் முதலீடு செய்தவர்கள், பத்திரத்தின் முதிர்ச்சியில், தங்கமாக பெற்றுக்கொள்ள முடியுமா? 6 மாதங்களுக்கு ஒருமுறை கொடுக்கப்படும் 2.5 சதவீத வட்டி, தங்கத்தின் விலை ஏற்ற – இறக்கத்திற்கு ஏற்றபடி கொடுக்கப்படுமா?
ஜி.சந்திர சேகர பாண்டியன், திண்டுக்கல்.
தங்கத்தை விற்பனை செய்வது, தங்க பத்திரத்தின் நோக்கம் அல்ல. தங்கத்தை அடிப்படை சொத்தாக வைத்துக்கொண்டு, அதன் விலை ஏற்றத்தின் பலனை முதலீட்டாளர்கள் நேரடியாக பெறுவதற்காக வந்துள்ளது தான், தங்க பத்திரம். அதனால், பத்திரத்தின் முதிர்வில், தங்கமாக பெற முடியாது. 2.5 சதவீத வட்டி என்பது, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, கடைசியாக விற்பனை செய்யப்படும் சராசரி விலையின் அடிப்படையிலேயே நிர்ணயம் செய்யப்படுகிறது.
வாச­கர்­களே, நிதி சம்­பந்­தப்­பட்ட உங்­கள் கேள்­வி­களை, ‘இ--–மெயில்’ மற்­றும் ‘வாட்ஸ் ஆப்’ வாயி­லாக அனுப்­ப­லாம்.
ஆயி­ரம் சந்­தே­கங்­கள்
தின­ம­லர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014என்ற நம் அலு­வ­லக முக­வ­ரிக்கு அஞ்­சல் வாயி­லா­க­வும் அனுப்­ப­லாம். கேள்­வி­க­ளைச் சுருக்­க­மாக தமி­ழில் கேட்­க­வும்.
ஆர்.வெங்­க­டேஷ்,
[email protected] ph:98410 53881

மூலக்கதை