வெற்றியின் விளிம்பில் இந்தியா: மும்பை டெஸ்டில் அசத்தல் | டிசம்பர் 05, 2021

தினமலர்  தினமலர்
வெற்றியின் விளிம்பில் இந்தியா: மும்பை டெஸ்டில் அசத்தல் | டிசம்பர் 05, 2021

மும்பை: மும்பை டெஸ்டில் அஷ்வின் ‘சுழல்’ ஜாலம் கைகொடுக்க, இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. 

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 325, நியூசிலாந்து 62 ரன் எடுத்தன. முதல் இன்னிங்சில் இந்தியா 263 ரன் முன்னிலை பெற்றது. பின் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 69 ரன் எடுத்திருந்தது. 

 

மூன்றாவது நாள் ஆட்டத்தில் மயங்க் அகர்வால்(62), புஜாரா(47), சுப்மன்(47), கேப்டன் கோஹ்லி(36) கைகொடுக்க, இரண்டாவது இன்னிங்சை இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 276 ரன் என்ற நிலையில் ‘டிக்ளேர்’ செய்தது. முதல் இன்னிங்சில் இந்தியாவின் 10 விக்கெட்டை வீழ்த்திய நியூசிலாந்தின் அஜாஸ் படேல், இரண்டாவது இன்னிங்சில் நான்கு விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

 

முதல் இன்னிங்ஸ் முன்னிலை(263 ரன்) சேர்த்து நியூசிலாந்துக்கு 540 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்தது. இதனை விரட்டிய நியூசிலாந்து அணி, அஷ்வின் ’சுழலில்’ ஆட்டம் கண்டது. இவரது வலையில் லதாம்(6), யங்(20), ராஸ் டெய்லர்(6) அவுட்டாகினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த மிட்சல்(60), அக்சர் பந்தில் வீழ்ந்தார். நியூசிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்திருந்தது.

இந்தியா சார்பில் அஷ்வின் 3 விக்கெட் வீழ்த்தினார்.

 

நியூசிலாந்தின் எஞ்சிய விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தி, சுலப வெற்றி பெற இந்தியா காத்திருக்கிறது.

 

மூலக்கதை