கிரிப்டோ கரன்சிகளுக்கு அங்கீகாரம் 54 சதவீதம் பேர் விரும்பவில்லை

தினமலர்  தினமலர்
கிரிப்டோ கரன்சிகளுக்கு அங்கீகாரம் 54 சதவீதம் பேர் விரும்பவில்லை

புதுடில்லி:இந்தியாவில் ‘கிரிப்டோ கரன்சி’களின் எதிர்காலம் குறித்து விரைவில் தீர்மானிக்கப்பட இருக்கும் நிலையில், டிஜிட்டல் சமூக தளமான ‘லோக்கல்சர்க்கிள்ஸ்’ ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இந்த ஆய்வில் பங்கேற்ற பொதுமக்களில் 54 சதவீதம் பேர், கிரிப்டோ கரன்சிகளை இந்தியாவில் சட்டப்பூர்வமாக்க விரும்பவில்லை என, தெரிவித்துள்ளனர். மாறாக, அவற்றை வெளிநாடுகளில் வைத்திருக்கும் சொத்துக்களாக கருத வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
லோக்கல் சர்க்கிள்ஸ் நிறுவனம், நாட்டில் உள்ள 342 மாவட்டங்களில், 56 ஆயிரம் நபர்களிடம் கிரிப்டோ கரன்சிகள் குறித்த ஆய்வை மேற்கொண்டது.இந்த ஆய்வில் 54 சதவீதம் பேர், கிரிப்டோ கரன்சிகளை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க விரும்பவில்லை.மேலும், அவற்றை வெளிநாட்டில் வைத்திருக்கும் சொத்துக்களாக கருதவேண்டும் என்றும், அவற்றுக்கு வரி வசூலிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் 26 சதவீதம் பேர், இத்தகைய நாணயங்கள் சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும் என்றும், அவற்றுக்கு வரி விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். 20 சதவீதம் பேரிடம் இது குறித்த கூற கருத்துகள் எதுவும் இல்லை. அத்துடன், 74 சதவீதம் பேர், இவற்றுக்கான விளம்பரங்களில் முதலீட்டு ‘ரிஸ்க்’ குறித்து போதுமான அளவில் அறிவுறுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
மக்களின் மனப்போக்கு குறித்து அறிந்துகொள்ள ஏதுவாக, இந்த ஆய்வு குறித்த முடிவுகளை மத்திய அரசு, பார்லி மென்ட், ரிசர்வ் வங்கி ஆகியவற்றுக்கு வழங்க இருப்பதாக, லோக்கல்சர்க்கிள்ஸ் தெரிவித்துள்ளது.

மூலக்கதை