விராத் கோஹ்லி ‘நம்பர்–11’: ‘டி–20’ தரவரிசையில் பின்னடைவு | நவம்பர் 24, 2021

தினமலர்  தினமலர்
விராத் கோஹ்லி ‘நம்பர்–11’: ‘டி–20’ தரவரிசையில் பின்னடைவு | நவம்பர் 24, 2021

துபாய்: ஐ.சி.சி., ‘டி–20’ தரவரிசையில் இந்தியாவின் கோஹ்லி 11வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

சர்வதேச ‘டி–20’ போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் முன்னாள் இந்திய கேப்டன் விராத் கோஹ்லி, 657 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருந்து 11வது இடத்துக்கு தள்ளப்பட்டார். நியூசிலாந்துக்கு எதிரான ‘டி–20’ தொடரில் இவருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது. இத்தொடரில் 159 ரன் விளாசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா (645), 15வது இடத்தில் இருந்து 13வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய துவக்க வீரர் லோகேஷ் ராகுல், 729 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு முன்னேறினார். ‘மிடில்–ஆர்டர்’ பேட்டர் சூர்யகுமார் யாதவ் (431 புள்ளி), 24 இடங்கள் முன்னேறி 59வது இடத்தை கைப்பற்றினார். நியூசிலாந்தின் மார்டின் கப்டில் (658) 10வது இடத்துக்கு முன்னேறினார்.

 

முதல் மூன்று இடங்களை பாகிஸ்தானின் பாபர் ஆசம் (809 புள்ளி), இங்கிலாந்தின் டேவிட் மலான் (805), தென் ஆப்ரிக்காவின் மார்க்ரம் (796) தக்கவைத்துக் கொண்டனர்.

 

பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் புவனேஷ்வர் குமார் (19வது இடம்), வாஷிங்டன் சுந்தர் (37வது), யுவேந்திர சகால் (38வது), தீபக் சகார் (41வது) முன்னேற்றம் கண்டனர். தமிழக ‘சுழல்’ வீரர் அஷ்வின், 129 இடங்கள் முன்னேறி, 92வது இடத்தை கைப்பற்றினார். முதல் மூன்று இடங்களில் இலங்கையின் ஹசரங்கா (797), தென் ஆப்ரிக்காவின் ஷம்சி (784), ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா (725) தொடர்கின்றனர்.

மூலக்கதை