மோட்டார் வாகன காப்பீடு சரிவு காணும் பொதுத்துறை

தினமலர்  தினமலர்
மோட்டார் வாகன காப்பீடு சரிவு காணும் பொதுத்துறை

மும்பை:மோட்டார் வாகன காப்பீட்டை பொறுத்தவரை, பொதுத்துறையை சேர்ந்த காப்பீட்டு நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது.

கொரோனாவுக்கு பின், மோட்டார் வாகன காப்பீடு பிரிவு மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி வரும் நிலையில், பொதுத்துறையை சேர்ந்த காப்பீட்டு நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்களிடம் தங்களுடைய பங்கை இழந்து வருகின்றன.வாகன காப்பீட்டு பிரிவில், கடந்த 2018 நிதியாண்டிலிருந்து இதுவரை, கிட்டத்தட்ட 30 சதவீத சந்தை பங்களிப்பை பொதுத்துறையை சேர்ந்த காப்பீட்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களிடம் இழந்துள்ளன.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், பொதுத்துறை நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு 36.6 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு ஆகஸ்டில் 32.6 சதவீதமாக சரிவைக் கண்டுள்ளது.இதுவே, தனியார் துறையை பொறுத்தவரை, கடந்த ஆண்டு ஆகஸ்டில் 63.4 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு ஆகஸ்டில் 67.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 2018 நிதியாண்டில், பொதுத்துறை நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு 46.5 சதவீதமாகவும்; தனியார் பங்கு 53.5 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த 2019ம் ஆண்டு தரவின்படி, இந்தியாவில் மொத்தம் 23.12 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் உள்ளன. இவற்றில் 57 சதவீத வாகனங்கள் காப்பீடு இல்லாதவையாகும்.

மூலக்கதை