நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்... *கோஹ்லிக்கு கவாஸ்கர் ஆறுதல் | அக்டோபர் 12, 2021

தினமலர்  தினமலர்
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்... *கோஹ்லிக்கு கவாஸ்கர் ஆறுதல் | அக்டோபர் 12, 2021

சார்ஜா: ஐ.பி.எல்., அரங்கில் கேப்டனாக கோப்பையை முத்தமிடும் அதிர்ஷ்டம் கோஹ்லிக்கு கிடைக்கவில்லை. பேட்டிங்கில் உச்சம் தொட்ட இவர், பெங்களூரு அணிக்காக 120 சதவீதம் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டார்.

ஐ.பி.எல்., துவங்கிய 2008ல் இருந்து பெங்களூரு அணிக்காக விளையாடுகிறார் கோஹ்லி. ஐ.பி.எல்., வரலாற்றில் அணி மாறாத ஒரே வீரர் இவர் தான். 2011ல் கேப்டன் வெட்டோரிக்கு காயம் ஏற்பட பெங்களூரு அணியை தற்காலிகமாக வழிநடத்தினார். 2013ல் பெங்களூரு அணியின் நிரந்தர கேப்டனாக நியமிக்கப்பட்டார். 2018ல் இவரை பெங்களூரு அணி ரூ. 17 கோடிக்கு தக்க வைக்க, ஐ.பி.எல்., அரங்கின் ‘காஸ்ட்லி’ வீரரானார். 14வது ஐ.பி.எல்., தொடருடன் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் சார்ஜாவில் நடந்த ‘எலிமினேட்டர்’ போட்டியில் பெங்களூரு அணி, கோல்கட்டாவிடம் தோல்வி அடைந்தது. கேப்டனாக கோப்பை வெல்லும் கோஹ்லியின் கனவும் தகர்ந்து போனது. பேட்டிங்கை பொறுத்தவரை இவரே கேப்டனாக அதிக ரன் எடுத்தவர். 140 போட்டிகளில் 4881 ரன்(சராசரி 42.07) எடுத்து முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் சென்னை கேப்டன் தோனி(203 போட்டி, 4456 ரன், சராசரி 40.88) உள்ளார். இந்திய அணியின் கேப்டனாக ஐ.சி.சி., கோப்பையை தொட முடியாத இவருக்கு, ஐ.பி.எல்., கோப்பையும் வசப்படவில்லை. இருப்பினும் தலைசிறந்த வீரராக, ஆக்ரோஷமான கேப்டனாக தன்னை அடையாளம் காட்டியுள்ளார். பெங்களூரு அணியின் கேப்டனாக 140 போட்டிகளில் 66 வெற்றி, 70 தோல்வியை சந்தித்துள்ளார். 4 போட்டிக்கு முடிவு இல்லை. இவரது வெற்றி சதவீதம் 48.52. கடந்த 2016ல் அணிக்கு இரண்டாம் இடம் பெற்று தந்ததே சிறந்த செயல்பாடு.

தனது பயணம் குறித்து கோஹ்லி கூறியது:

பெங்களூரு அணிக்காக எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளேன். ஒவ்வொரு முறை களமிறங்கும் போதும் 120 சதவீதம் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு இருக்கிறேன்.  தொடர்ந்து விஸ்வாசமாக இருப்பேன். வேறு அணிகளுக்காக விளையாட மாட்டேன். ஐ.பி.எல்., அரங்கில் விளையாடும் கடைசி நாள் வரை பெங்களூரு அணிக்காக சாதாரண வீரராக பங்கேற்பேன். அடுத்து அணிக்கு தலைமை ஏற்பவர்கள் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இளம் வீரர்கள் சுதந்திரத்துடனும் தன்னிம்பிக்கையுடனும் விளையாடும் கலாசாரத்தை உருவாக்கினேன். இதை தான் இந்திய அணியிலும் செயல்படுத்தினேன்.

‘எலிமினேட்டர்’ போட்டியில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. இருப்பினும் சக வீரர்கள் நடந்த கொண்ட விதம் பெருமையாக இருந்தது. கடைசி வரை போராடியதால், தலை நிமிர்ந்து நிற்கலாம். தொடர்ந்து ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி.

இவ்வாறு கோஹ்லி கூறினார்.

 

பிராட்மேன், சச்சின் வழியில்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில்,‘‘பெங்களூரு அணிக்கு மிகப் பெரும் அங்கீகாரத்தை கோஹ்லி பெற்று தந்துள்ளார். ஒவ்வொருவரும் தங்களது பயணத்தை சிறப்பாக முடிக்க விரும்புவர். ஆனால் நினைப்பது போல் நடப்பதில்லை. ஆஸ்திரேலியாவின்  பிராட்மேன் கடைசி ஓவல் போட்டியில் (எதிர் இங்கிலாந்து, 1948)போட்டியில் 4 ரன் எடுத்திருந்தால், டெஸ்டில் 100 ரன் சராசரியை எட்டியிருப்பார். துரதிருஷ்டவசமாக ‘டக்’ அவுட்டாக, சராசரி 99.94 ஆனது.

சச்சின் தனது 200வது டெஸ்டில் (எதிர் விண்டீஸ், 2013, மும்பை) சதம் அடிக்க விரும்பியிருப்பார். ஆனால் 74 ரன்களுக்கு அவுட்டானார். இது போல கேப்டனாக கோஹ்லிக்கும் ஐ.பி.எல்., கோப்பை கிடைக்கவில்லை. இருப்பினும் தனது திறமையை அழுத்தமாக நிரூபித்துள்ளார். 2016, சீசனில் மட்டும் 973 ரன்கள் எடுத்தார். 1000 ரன்களுக்கு 27 ரன்கள் தான் குறைவு. இந்த சாதனையை இதுவரை யாரும் நெருங்கவில்லை,’’என்றார்.

 

தன்னம்பிக்கை விதை

சக பெங்களூரு வீரர் டிவிலியர்ஸ் கூறுகையில்,‘‘அணியை சிறப்பாக வழிநடத்தினார் கோஹ்லி. சிறந்த வீரராகவும் மனிதராகவும் உருவெடுக்க எனக்கு ஊக்கம் அளித்தார். அணியில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். மக்கள் மத்தியில் தன்னம்பிக்கை விதையை விதைத்தார். இது கோப்பை வெல்வதைவிட முக்கியமானது. அணியின் நலனுக்காக அவர் செய்த விஷயங்களை மறக்க மாட்டோம். சில அம்பயர்கள் இனி நிம்மதியாக துாங்கலாம். இனிமையான நினைவுகளை தந்ததற்கு நன்றி,’’என்றார்.

மூலக்கதை