சூதாட்டத்துக்கு சிக்னலா? தீபக் ஹூடாவிடம் விசாரணை!

தினகரன்  தினகரன்
சூதாட்டத்துக்கு சிக்னலா? தீபக் ஹூடாவிடம் விசாரணை!

துபாய்: ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே, பஞ்சாப் வீரர் தீபக் ஹூடா தான் ஆடும் அணியில் இடம் பெற்றுள்ளதை சமூக ஊடகத்தில் வெளிட்டார். அதன்மூலம்   சூதாட்ட தரகர்களுக்கு  தகவல் தெரிவிக்க முயன்றாரா? என்பது குறித்து ஐபிஎல் அதிகாரிகள் விசாரணை செய்ய உள்ளனர்.ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் அமீரகத்தில் நடக்கின்றன. கடந்த செவ்வாய்கிழமை நடந்த ஆட்டத்தில்  பஞ்சாப் கிங்ஸ் 2ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணியிடம் தோற்றது. போட்டி தொடங்குவதற்கு  சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக   பஞ்சாப் வீரர் தீபக் ஹூடா ‘ஹெல்மட் அணிந்த படத்தை’ சமூக ஊடகத்தில் வெளியிட்டார். கூடவே ‘நாங்கள் தயார்’ என்ற வாசகங்களை பதிவிட்டிருருந்தார்.அதன் மூலம்  தான் ‘ஆடும் அணியில்’ தான்  இடம் பெற்றுள்ளதை  மறைமுகமாக யாருக்கோ உணர்த்துவது போல் இருந்தது. ஐபிஎல் விதிகளின்படி  இப்படி பதிவிடுவது குற்றம்.  அப்படி செய்ததால்  சூதாட்ட தரகர்களுக்கு சிக்னல் கொடுக்க தீபக் முயன்றாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.அதனால் தீபக் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி ஐபிஎல் ஊழல் தடுப்பு விசாரணை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.  அவர் தெரியாமல் செய்தது உறுதியானாலும் குறைந்தபட்சம் அபராதமாவது விதிக்கப்படும். பொதுவாக தீபக் கொஞ்சம் வெளிப்படையான ஆள். உள்நாட்டு தொடரில் பரோடா அணியின்  கேப்டன் க்ருணால் பாண்டியாவுடனும், கிரிக்கெட் சங்கத்துடனும்  நேரடியாக மோதியவர். அதனால் அந்த அணியில் இருந்தும் விலகியவர்.

மூலக்கதை