ஆலோசகராக தோனி: சேவக் வரவேற்பு | செப்டம்பர் 18, 2021

தினமலர்  தினமலர்
ஆலோசகராக தோனி: சேவக் வரவேற்பு | செப்டம்பர் 18, 2021

புதுடில்லி: ‘‘இந்திய அணிக்கு ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டிருப்பது பவுலர்களுக்கு சாதகமானது,’’ என, சேவக் தெரிவித்துள்ளார்.

எமிரேட்ஸ், ஓமனில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் அணியின் ஆலோசகராக, இந்தியாவுக்கு 2 உலக கோப்பை (2007ல் ‘டுவென்டி–20’, 2011ல் 50 ஓவர்) பெற்றுத்தந்த முன்னாள் கேப்டன் தோனி 40, நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் சேவக் கூறியது: ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. இவர் மீண்டும் இந்திய அணியில் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பினர். தற்போது அது நிறைவேறியுள்ளது. இவரது வருகை பவுலர்களுக்கு சாதகமானது. சிறந்த விக்கெட் கீப்பரான இவர், ‘பீல்டிங்’ வியூகம் வகுப்பதில் அனுபவம் பெற்றவர். இவரது ஆலோசனைகளை பயன்படுத்தி பவுலர்கள் விக்கெட் வேட்டை நடத்தலாம். இவர் விளையாடிய நாட்களில் பவுலர்களின் கேப்டனாக இருந்துள்ளார். தவிர இவர், இளம் வீரர்களிடம் எளிதாக பழகக் கூடியவர். எனவே இவரது ஆலோசனை இந்தியாவின் வெற்றிக்கு நிச்சயம் கைகொடுக்கும்.

ஐ.பி.எல்., 14வது சீசனில் மும்பை, டில்லி அணிகளுக்கு சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு உள்ளது. சென்னை, பெங்களூரு அணிகள் கோப்பை வெல்ல கடினமாக போராட வேண்டும். சென்னை அணி பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு சேவக் கூறினார்.

மூலக்கதை