அனுபவம் அருமை...சிராஜ் பெருமை | செப்டம்பர் 17, 2021

தினமலர்  தினமலர்
அனுபவம் அருமை...சிராஜ் பெருமை | செப்டம்பர் 17, 2021

துபாய்: ‘‘இங்கிலாந்து மண்ணில் சிறந்த அனுபவம் கிடைத்தது. இது, அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட உதவும்,’’ என, முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 27. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் அறிமுகமான இவர், இதுவரை 9 டெஸ்டில், 30 விக்கெட் சாய்த்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் 4 போட்டியில், 14 விக்கெட் கைப்பற்றினார். இருப்பினும் இவருக்கு, எமிரேட்ஸ், ஓமனில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

 

இதுகுறித்து சிராஜ் கூறியது: இங்கிலாந்து தொடரில் நல்ல அனுபவம் கிடைத்தது. கேப்டன் கோஹ்லி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, சக வீரர்கள் என அனைவரும் என் மீது நம்பிக்கை வைத்தனர். இதற்கேற்ப சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித்தந்ததில் மகிழ்ச்சி.

எந்த ஒரு வீரருக்கும் ‘டுவென்டி–20’ உலக கோப்பை போன்ற மிகப் பெரிய தொடரில் விளையாட வேண்டும் என்பது கனவாக இருக்கும். ஆனால் அணித் தேர்வு எனது கையில் இல்லை. வாய்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும். அணியில் இடம் கிடைக்காததால் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக அர்த்தமில்லை. எனக்கு இன்னும் நிறைய இலக்குகள் உள்ளன. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நிறைய போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுக்க முயற்சிப்பேன்.

இவ்வாறு சிராஜ் கூறினார்.

மூலக்கதை