பாகிஸ்தானா... பயமா இருக்கு * தொடரை ரத்து செய்த நியூசி., | செப்டம்பர் 17, 2021

தினமலர்  தினமலர்
பாகிஸ்தானா... பயமா இருக்கு * தொடரை ரத்து செய்த நியூசி., | செப்டம்பர் 17, 2021

ராவல்பிண்டி: பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு பின்னடைவு. இங்கு பாதுகாப்பில்லை என உணர்ந்த நியூசிலாந்து அணி, கடைசி நிமிடத்தில் தொடரை ரத்து செய்து நாடு திரும்புகிறது.

நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள், ஐந்து ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க, 18 ஆண்டுக்குப் பின் கடந்த செப். 11ல் பாகிஸ்தான் சென்றது. ஒருநாள் தொடர் ராவல்பிண்டியில் நடக்க இருந்தது. இதற்காக மைதானத்தில் இருந்து 15 நிமிட பயணத்தில் செல்லக் கூடிய ஓட்டலில் இரு அணியினரும் தங்கியிருந்தனர்.

நேற்று மதியம் முதல் போட்டி துவங்க இருந்தது. 25 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்ததால், மைதானம் வரத்துவங்கினர். ஆனால் இரு அணியினரும் ஓட்டலை விட்டு கிளம்பாமல் இருந்தனர். இதனால் ரசிகர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து போட்டி திட்டமிட்டபடி துவங்குமா என சந்தேகம் ஏற்பட்டது.

இதன் பின் தொடர் ரத்து செய்யப்படுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு (என்.இசட்.சி.,) அறிவித்தது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், ‘பாகிஸ்தான் தொடரில் பங்கேற்பதால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து நியூசிலாந்து அரசு கொடுத்த தகவல், மைதானத்தில் இருந்து என்.இசட்.சி., பாதுகாப்பு ஆலோசகர் கொடுத்த ‘அட்வைஸ்’ படி, பாகிஸ்தான் தொடரை ரத்து செய்வது என முடிவு செய்துள்ளோம்,’ என தெரிவித்தது.

நாடு திரும்புகிறது

தற்போது உடனடியாக நாடு திரும்புவதற்கான வேலைகளில் நியூசிலாந்து அணியினர் ஈடுபட்டுள்ளனர். என்.இசட்.சி., தலைமை அதிகாரி டேவிட் ஒயிட் கூறுகையில்,‘‘சிறப்பான முறையில் தொடரை நடத்த ஏற்பாடு செய்த பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இது பெரிய இழப்பு என்பதை புரிந்து கொள்கிறோம். ஆனால் வீரர்கள் பாதுகாப்பு மிக முக்கியம். எங்களுக்கு வேறு வழியில்லை,’’ என்றார்.

தொடர் ரத்தானதால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில்,‘‘பாகிஸ்தான் வரும் அணிகளுக்கு அரசு, பி.சி.பி., தரப்பில் உயர்மட்ட பாதுகாப்பு வழங்கப்படுகிறது. நியூசிலாந்து அணிக்கும் நாங்கள் உறுதி அளித்து இருந்தோம். திடீரென ரத்து செய்திருப்பது ஒருதலைப்பட்சமான முடிவு,’ என தெரிவித்தது.

இரண்டாவது முறை

பாகிஸ்தானில் பயங்கரவாத அச்சுறுத்தல் எப்போதும் உண்டு. நியூசிலாந்து அணி கடந்த 2003ல் டெஸ்ட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றது. கராச்சியில் இரு அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு வெளியே குண்டு வெடித்தது. இதில் வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், தொடரை ரத்து செய்த நியூசிலாந்து, அடுத்த விமானத்தை பிடித்து நாடு திரும்பியது.

 

லாகூர் தாக்குதல்

கடந்த 2009ல் லாகூரில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இலங்கை வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதில் 6 வீரர்கள் காயமடைந்தனர். இதன் பின் பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் நடக்கவில்லை. இம்ரான்கான்(1991ல் உலக கோப்பை வென்றவர்) பிரதமரான பின், சொந்தமண்ணில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த முயற்சி எடுத்தார்.

* 2017ல் பிரிமியர் லீக் (பி.எஸ்.எல்.,) தொடரின் பைனல் பாகிஸ்தானில் நடந்தது.

* விண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே, தென் ஆப்ரிக்க அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாடின.

* தற்போது நியூசிலாந்து தொடர் ரத்தானதால் மீண்டும் இங்கு போட்டிகள் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

சந்தேகத்தில் இங்கிலாந்து

இங்கிலாந்து அணி வரும் அக். 13, 14ல் ராவல்பிண்டி சென்று இரு ‘டுவென்டி–20’ போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இங்கிலாந்து பெண்கள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. நியூசிலாந்து விலகியதால் இங்கிலாந்து அணியின் பாகிஸ்தான் பயணம் சந்தேகமாகி உள்ளது. இதுகுறித்து அடுத்த 24 முதல் 48 மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு ஒரே நிறுவனம் தான் பாதுகாப்பு ‘அட்வைஸ்’ தருகிறது. இதனால் இங்கிலாந்து தொடர் ரத்தாக அதிக வாய்ப்புள்ளது. அடுத்து ஆஸ்திரேலியாவின் பாகிஸ்தான் பயணமும் கைவிடப்படலாம்.

 

அக்தர் ஆவேசம்

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தரின் சொந்த மண் ராவல்பிண்டி. இங்கு தான் ஒருநாள் தொடர் நடக்க இருந்தது. இவர் கூறியது:

* நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த தாக்குதலில் 9 பாகிஸ்தானியர் கொல்லப்பட்டனர். இவ்விஷயத்தில் உங்களுக்கு ஆதரவாக இருந்தோம்.

* கொரோனா அதிகமாக பரவிய நேரத்திலும், நியூசிலாந்து நிர்வாகம் மோசமாக நடத்திய போதும், உங்கள் மண்ணில் விளையாடினோம்.

* மிரட்டல் வந்தது என்றால் அதுகுறித்து விவாதித்து இருக்க வேண்டும்.

* தென் ஆப்ரிக்கா, இலங்கை உட்பட பல தொடர்களை பாதுகாப்பாக நடத்தியுள்ளோம்.

* தொடரை ரத்து செய்ததன் மூலம், பாகிஸ்தான் கிரிக்கெட்டை நியூசிலாந்து கொன்று விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

கெஞ்சினார் இம்ரான் கான்

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு வெளியிட்ட செய்தியில்,‘பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்னிடம் நேரடியாக பேசினார். அப்போது,‘எங்களது புலனாய்வு அமைப்பு உலகின் சிறந்தவைகளில் ஒன்று. நியூசிலாந்து அணிக்கு இங்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை,’ என விளக்கி கூறினார். ஆனாலும் நியூசிலாந்து எதையும்  கேட்கவில்லை,’ என தெரிவித்தது.

 

ஜெசிந்தா கைவிரிப்பு

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் கூறுகையில்,‘‘தொடர் ரத்தானதால் எல்லோரும் எந்தளவுக்கு ஏமாற்றம் அடைந்திருப்பர் எனத் தெரியும். ஆனால் வீரர்கள் பாதுகாப்பு தான் முக்கியம் என்பதால், முடிவில் உறுதியாக இருந்தோம்,’’ என்றார்.

 

மிகுந்த ஏமாற்றம்

பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘லட்சக்கணக்கான ரசிகர்கள் முகத்தில் புன்னகை கொண்டு வந்திருக்க வேண்டிய தொடர், திடீரென ரத்தானது மிகுந்த ஏமாற்றம் தந்துள்ளது,’ என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை