‘யார்க்கர் கிங்’ மலிங்கா ‘குட்–பை’ * கிரிக்கெட் அரங்கில் இருந்து... | செப்டம்பர் 14, 2021

தினமலர்  தினமலர்
‘யார்க்கர் கிங்’ மலிங்கா ‘குட்–பை’ * கிரிக்கெட் அரங்கில் இருந்து... | செப்டம்பர் 14, 2021

கொழும்பு: கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார் மலிங்கா.

இலங்கை அணியின் ‘வேகப்புயல்’ லசித் மலிங்கா, 38. கடந்த 2004ல் அறிமுகமானார். வித்தியாசமான முறையில் பந்துவீசும் இவர், ‘ஸ்லோ பவுன்சர்’, ‘வைடு யார்க்கர்’ என பன்முக தாக்குதல் நடத்துவதில் வல்லவர். பேட்ஸ்மேன்களின் கால்களுக்கு குறி வைத்து ‘யார்க்கர்’ வீசி மிரட்டுவார். கடைசி கட்ட ஓவர்களில் துல்லியமாக பந்துவீசி வெற்றி நாயகனாக ஜொலித்தார்.

உலக கோப்பை நாயகன்

கடந்த 2011 உலக கோப்பை தொடரில் (50 ஓவர்) இலங்கை அணி பைனலுக்கு முன்னேற முக்கிய காரணமாக இருந்தார். 2014ல் இவரது தலைமையிலான இலங்கை அணி ‘டுவென்டி–20’ உலக கோப்பை வென்றது. முழங்கால், கணுக்கால் காயத்தால் அடிக்கடி அவதிப்பட்ட இவர், ஏற்கனவே டெஸ்ட், ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். ‘டுவென்டி–20’ போட்டியில் நீடிப்பது குறித்து முடிவை அறிவிக்காமல் இருந்தார். நேற்று அனைத்துவித கிரிக்கெட்டிலும் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இது குறித்து ‘டுவிட்டரில்’ மலிங்கா வெளியிட்ட செய்தி:

எனது ‘டுவென்டி–20’ ஷூவுக்கு நுாறு சதவீதம் ஓய்வு அளிக்க விரும்புகிறேன். எனது ஷூவுக்கு ஓய்வு கொடுத்தாலும், கிரிக்கெட் மீதான என் காதலுக்கு என்றுமே ஓய்வு கிடையாது. கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விடைபெறுகிறேன். எனது 17 ஆண்டு கால பயணத்தில் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. எனது அனுபவங்களை இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொள்ள காத்திருக்கிறேன். இவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து உதவ விரும்புகிறேன்.

இவ்வாறு மலிங்கா தெரிவித்துள்ளார்.

‘ஹாட்ரிக்’ சாதனையாளர்

* 30 டெஸ்ட் (101 விக்.,), 226 ஒருநாள் போட்டிகளில் (338 விக்.,) பங்கேற்றுள்ளார்.

* சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர். அதிக விக்கெட் (84 போட்டி, 107 விக்.,) வீழ்த்தியவரும் இவரே.

* ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணியின் ‘ஹீரோ’வாக இருந்தார். ஐ.பி.எல்., அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் (122 போட்டிகளில் 170 விக்கெட்) முதலிடத்தில் உள்ளார்.

* ஒருநாள் போட்டியில் 3, ‘டுவென்டி–20’ அரங்கில் 2 என மொத்தம் 5 முறை ‘ஹாட்ரிக்’ விக்கெட் கைப்பற்றியுள்ளார். இதில் இரண்டு முறை 4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

மூலக்கதை