‘கில்லி’ சுப்மன் கில்: கோல்கட்டா முதல் வெற்றி | செப்டம்பர் 26, 2020

தினமலர்  தினமலர்
‘கில்லி’ சுப்மன் கில்: கோல்கட்டா முதல் வெற்றி | செப்டம்பர் 26, 2020

அபுதாபி: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சுப்மன் கில் அரைசதம் கடந்து கைகொடுக்க கோல்கட்டா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றி பெற்றது.

 

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா, ஐதராபாத் அணிகள் மோதின.

 

சகா தேர்வு: ஐதராபாத் அணியில் மிட்சல் மார்ஷ், விஜய் சங்கர், சந்தீப் சர்மாவுக்கு பதிலாக முகமது நபி, விரிதிமன் சகா, கலீல் அகமது சேர்க்கப்பட்டனர். கோல்கட்டா அணியில் நிகில் நாயக், சந்தீப் வாரியர் நீக்கப்பட்டு வருண் சக்கரவர்த்தி, கமலேஷ் நாகர்கோட்டி தேர்வாகினர். ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

 

பாண்டே அரைசதம்: ஐதராபாத் அணிக்கு கேப்டன் வார்னர், பேர்ஸ்டோவ் ஜோடி துவக்கம் தந்தது. நரைன் வீசிய 3வது ஓவரில் வார்னர், ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். கம்மின்ஸ் ‘வேகத்தில்’  பேர்ஸ்டோவ் (5) போல்டானார். வருண் ‘சுழலில்’ வார்னர் (36) சிக்கினார். ஷிவம் மாவி, குல்தீப் யாதவ் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசிய மணிஷ் பாண்டே, 35 பந்தில் அரைசதமடித்தார். ரசல் பந்தில் பாண்டே (51) அவுட்டானார். சகா (30) ஆறுதல் தந்தார்.

ஐதராபாத் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்தது. நபி (11), அபிஷேக் (2) அவுட்டாகாமல் இருந்தனர். கோல்கட்டா சார்பில் கம்மின்ஸ், வருண், ரசல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

 

கில் அபாரம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு சுனில் நரைன் (0) ஏமாற்றினார். கலீல் அகமது பந்தில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்த நிதிஷ் ராணா (26) ஓரளவு கைகொடுத்தார். கேப்டன் தினேஷ் கார்த்திக் (0) சொதப்பினார். நடராஜன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய சுப்மன் கில் அரைசதமடித்தார். நடராஜன் வீசிய 18வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த மார்கன் வெற்றியை உறுதி செய்தார்.

கோல்கட்டா அணி 18 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கில் (70), மார்கன் (42) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூலக்கதை