போராட்டக்குணம் படைத்த பிஷ்னாய்: லோகேஷ் ராகுல் பாராட்டு | செப்டம்பர் 25, 2020

தினமலர்  தினமலர்
போராட்டக்குணம் படைத்த பிஷ்னாய்: லோகேஷ் ராகுல் பாராட்டு | செப்டம்பர் 25, 2020

துபாய்: ‘‘பிஷ்னாயின் வெற்றிக்கு அவரது போராட்டக்குணம் முக்கிய பங்கு வகிக்கிறது,’’ என, லோகேஷ் ராகுல் தெரிவித்துள்ளார்.

துபாயில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பஞ்சாப் அணி (206/3, 20 ஓவர்) 97 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை (109/10, 17 ஓவர்) வீழ்த்தியது. இப்போட்டியில் பஞ்சாப் அணியின் ‘சுழல்’ வீரர் ரவி பிஷ்னாய், தனது முதல் ஓவரில் 15 ரன் விட்டுக்கொடுத்தார். பின் எழுச்சி கண்ட இவர், 3 விக்கெட் கைப்பற்றினார்.

இதுகுறித்து லோகேஷ் ராகுல் கூறியது: 

உண்மையை கூற வேண்டுமானால் துவக்கத்தில் சற்று பதற்றத்துடன் இருந்தேன். ஒரு சில பந்துகளை சந்தித்த பின் தான் இயல்பு நிலைக்கு திரும்பினேன். ‘டாஸ்’ போட செல்லும் வரை நான் என்னை கேப்டனாக எண்ணவில்லை, வீரராகவே உணர்ந்தேன். இந்த வெற்றி ஒட்டுமொத்த அணியின் சிறப்பான செயல்பாட்டுக்கு கிடைத்தது. 

ஏனெனில் பெங்களூரு அணி பலமான ‘பேட்டிங்’ வரிசை கொண்டுள்ளது. இதனால் துவக்கத்தில் 2–3 விக்கெட் வீழ்த்த திட்டமிட்டோம். இதற்கேற்ப பவுலர்கள் கைகொடுத்தனர்.

தனது முதல் ஓவரில் அதிக ரன்கள் வழங்கிய பிஷ்னாய், கோஹ்லி, டிவிலியர்ஸ், பின்ச் உள்ளிட்டோருக்கு பந்துவீச கொஞ்சம் பயந்தார். பின், மனஉறுதியுடன் போராடி விக்கெட் வேட்டை நடத்தினார். இந்த போராட்டக்குணம் தான் இவரது வெற்றிக்கு காரணம். இவரது செயல்பாட்டை 19 வயதுக்குட்பட்ட உலக கோப்பை தொடரில் பார்த்துள்ளேன். இது என்னை கவர்ந்தது.

இவ்வாறு ராகுல் கூறினார்.

மூலக்கதை