வங்கிகள் குறித்த கண்ணோட்டம் 'எதிர்மறை' நிலைக்கு இறக்கம்

தினமலர்  தினமலர்
வங்கிகள் குறித்த கண்ணோட்டம் எதிர்மறை நிலைக்கு இறக்கம்

மும்பை:நடப்பு நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில், பொதுத்துறை வங்கிகள் குறித்த தன் கண்ணோட்டத்தை, எதிர்மறை நிலைக்கு மாற்றி அறிவித்துள்ளது, இந்தியா ரேட்டிங்ஸ்.

உள்நாட்டு தர நிர்ணய நிறுவனமான, இந்தியா ரேட்டிங்ஸ் ,இது குறித்து தெரிவித்து உள்ளதாவது:நடப்பு நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில், வங்கிகள் நிலை குறித்த கண்ணோட்டமானது, 'நிலையானது' என்பதிலிருந்து, 'எதிர்மறை' என்ற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

நலிவுறும் சொத்து மதிப்புகள், கடனுக்கான செலவுகள், மற்றும் பலவீனமான வருவாய் ஆகியவை காரணமாக, இந்நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது.கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால், முடக்கப்பட்ட வளர்ச்சி வாய்ப்புகளும் கணக்கில் கொள்ளப்பட்டன.பொதுத்துறை வங்கிகள் குறித்த கண்ணோட்டம், 'எதிர்மறை'க்கு மாற்றப்பட்டாலும், தனியார் துறை வங்கிகளைப் பொறுத்தவரை, 'நிலையானது' என்ற தன்மையே தொடர்கிறது.


தனியார் வங்கிகள், கொரோனா சவால்களை சிறந்த முறையில் எதிர்கொண்டு வருகின்றன. கடந்த மார்ச் மாத இறுதி நிலவரப்படி, நிறுவன மற்றும் நிறுவனங்கள் அல்லாத பிரிவுகளில் வழங்கப்பட்ட மொத்த வங்கிக் கடனில், 7.7 சதவீதம் அதாவது, கிட்டத்தட்ட, 8.4 லட்சம் கோடி ரூபாய் வரை மறுசீரமைக்கப்படலாம். அல்லது மறுசீரமைப்பிற்கு அவை தகுதி இல்லா விட்டால் வாராக் கடனாக மாறிவிடலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை