தோல் பொருட்கள் ஏற்றுமதி இனி அதிகரிக்க வாய்ப்பு

தினமலர்  தினமலர்
தோல் பொருட்கள் ஏற்றுமதி இனி அதிகரிக்க வாய்ப்பு

புதுடில்லி:உலகளாவிய சந்தைகளில் தேவை அதிகரித்து வருவதால், நாட்டின், தோல் மற்றும் காலணி பொருட்களின் ஏற்றுமதி, எதிர்வரும் மாதங்களில் முன்னேற்றம் காணும் என, தோல் ஏற்றுமதி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இது குறித்து, கவுன்சிலின் தலைவர் அகீல் அகமது பனரூணா கூறியதாவது:உலகளவிலான சந்தைகளில் தேவை அதிகரித்து வருவதால், தோல் மற்றும் காலணி பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 2,600 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

நடப்பு செப்டம்பர் மாதத்தில், கடந்த ஆண்டு இதே மாதத்தில் நடைபெற்ற ஏற்றுமதியில், 90 சதவீதத்தை எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.இந்த துறை, கடந்த ஜூலை மாதத்தில், 2,431 கோடி ரூபாய்க்கும்; ஜூன் மாதத்தில், 1,789 கோடி ரூபாய்க்கும் ஏற்றுமதி செய்துள்ளது. தற்போது, பலர் வீட்டிலிருந்து வேலை செய்து வருவதால், அதற்கு தகுந்தாற் போன்ற தேவைகள் அதிகரித்து வருகின்றன.

இருப்பினும், தொற்றுநோய் கட்டுக்குள் வந்ததும், அலுவலக மற்றும் வீட்டு பயன்பாட்டுக்கான ஒட்டுமொத்த தேவை அதிகரிக்கும். இதன் தொடர்ச்சியாக, அதிக வாய்ப்புகள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை