பண்டிகை கால ஆன்லைன் விற்பனை இம்முறை இருமடங்கு அதிகரிக்கும்

தினமலர்  தினமலர்
பண்டிகை கால ஆன்லைன் விற்பனை இம்முறை இருமடங்கு அதிகரிக்கும்

புதுடில்லி:நடப்பு ஆண்டு பண்டிகை காலத்தில், மின்னணு வர்த்தக நிறுவனங்கள் மூலமான மொத்த விற்பனை மதிப்பு, 7 பில்லியன் டாலர் அதாவது, கிட்டத்தட்ட, 51 ஆயிரத்து, 100 கோடி ரூபாயைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நடந்த விற்பனையுடன் இதை ஒப்பிடும்போது, இரு மடங்கு அதிகமாக இருக்கும் என தெரிகிறது. கடந்த ஆண்டு, இதே காலத்தில், 3.8 பில்லியன் டாலர், அதாவது, 27 ஆயிரத்து, 740 கோடி ரூபாய் அளவுக்கே விற்பனை ஆகியிருந்தது. ஆய்வு நிறுவனமான, ‘ரெட்சீர்’ தன் அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளது.


இதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:வரும் பண்டிகை கால விற்பனை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இருமடங்கு அதிகரிக்கும் என எதிபார்க்கப்படுகிறது.சிறப்பான பண்டிகை விற்பனை அடிப்படையில், மின்னணு வர்த்தகம், நடப்பு ஆண்டில், 38 பில்லியன் டாலர் அதாவது, 2.77 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே, கடந்த ஆண்டில், 1.97 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

கொரோனா பாதிப்பு, புதிய மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. நுகர்வோர், முன்பை விட இப்போது பாதுகாப்பான, சுகாதாரமான, வசதியான முறையில் பொருட்களை வாங்க விரும்புகிறார்கள்.மின்னணு வர்த்தகம் நுகர்வோர்களின் இத்தகைய தேவைகளை பூர்த்தி செய்வதாக இருக்கிறது.இந்நிலையில், ஆன்லைன் மூலமான வர்த்தகத்தில், புதிய தொழில்நுட்ப வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.


வீடியோ வசதி, வாட்ஸ்ஆப் மூலமான அணுகல் ஆகியவற்றை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.மொபைல் போன் மற்றும் மின்னணு சாதனங்கள் விற்பனை அதிகரிக்கும் என்றாலும், கடந்த ஆண்டு அளவுக்கு இருக்காது. அதேசமயம், ஊரடங்குகள் காரணமாக, பேஷன் பொருட்களுக்கான தேவை அதிகரித்து இருப்பதால், அத்துறையில் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை