கொரோனா ‘ஹீரோக்கள்’ * பெங்களூரு அணி அர்ப்பணிப்பு | செப்டம்பர் 17, 2020

தினமலர்  தினமலர்
கொரோனா ‘ஹீரோக்கள்’ * பெங்களூரு அணி அர்ப்பணிப்பு | செப்டம்பர் 17, 2020

 துபாய்: கொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்கும் வகையில், பெங்களூரு அணி வீரர்கள் ‘எனது கொரோனா ஹீரோக்கள்’ என்ற வாசகம் அடங்கிய ‘ஜெர்சி’ அணிய உள்ளனர். 

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நாளை துவங்குகிறது. கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி, இம்முறை புதிய ‘ஜெர்சியுடன்’ களமிறங்குகிறது. இதுகுறித்து கோஹ்லி கூறியது:

கடந்த சில மாதங்களாக கோரோனா களத்தில் நிற்கும் முன்கள பணியாளர்கள் குறித்த செய்திகளை கேள்விப்படும் போதெல்லாம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. இவர்கள் தான் தேசத்தை பெருமை அடையச் செய்த உண்மையான ‘சேலஞ்சர்ஸ்’. 

நாளைய தினத்தை சிறப்பானதாக உருவாக்க நாம் அர்ப்பணிப்பு உணர்வுடன் தொடர்ந்து செயல்பட துாண்டுகோலாக திகழ்கின்றனர். இரவு, பகல் என பாராமல் களத்தில் அவர்கள் போராடுகின்றனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ‘எனது கோரோனா ஹீரோக்கள்’ என்ற வாசகம் கொண்ட ‘ஜெர்சி’ அணிவதில் உண்மையில் பெருமைப்படுகிறேன். இவர்களை ‘ஹீரோக்கள்’ என்று அழைப்பதில் பெருமைப்படுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 


ரசிகர்கள் இல்லாமல்...

கோஹ்லி கூறுகையில்,‘‘உயர்மட்ட பாதுகாப்பு வளையத்தில் இருப்பதற்கு வீரர்கள் தற்போது நன்கு பழகி விட்டனர். அனைவரும் ‘ரிலாக்சாக’ உள்ளனர். ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவது சற்று விசித்திரமானதாக இருக்கும், இதை மறுக்க முடியாது. ஆனால் பயிற்சிபோட்டிகளுக்குப் பின் இந்த உணர்வு மாறிவிட்டது,’’ என்றார்.

மூலக்கதை