கோப்பை வென்றது ஆஸ்திரேலியா: மேக்ஸ்வெல், கேரி சதம் | செப்டம்பர் 16, 2020

தினமலர்  தினமலர்
கோப்பை வென்றது ஆஸ்திரேலியா: மேக்ஸ்வெல், கேரி சதம் | செப்டம்பர் 16, 2020

மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி சதம் கடந்து கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி கடைசி ஓவரில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ‛திரில்’ வெற்றி பெற்றது.

இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1–1 என, சமநிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி மான்செஸ்டரில் நடந்தது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் தேர்வு செய்யப்படவில்லை. இங்கிலாந்து அணியில் சாம் கரான் நீக்கப்பட்டு மார்க் உட் இடம் பிடித்தார்.

பேர்ஸ்டோவ் சதம்: ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்டிங்’ செய்த இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் (0), ஜோ ரூட் (0) ஏமாற்றினர். ஜாம்பா ‘சுழலில்’ ஜாஸ் பட்லர் (8), கேப்டன் இயான் மார்கன் (23) சிக்கினர். அபாரமாக ஆடிய ஜானி பேர்ஸ்டோவ், ஒருநாள் போட்டியில் 10வது சதமடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த சாம் பில்லிங்ஸ் அரைசதம் கடந்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 114 ரன் சேர்த்த போது ஜாம்பா பந்தில் பில்லிங்ஸ் (57) அவுட்டானார். கம்மின்ஸ் ‘வேகத்தில்’ பேர்ஸ்டோவ் (112) அவுட்டானார். டாம் கரான் (19) நிலைக்கவில்லை. கிறிஸ் வோக்ஸ், தன்பங்கிற்கு அரைசதமடித்தார்.

 

இங்கிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்தது. வோக்ஸ் (53), அடில் ரஷித் (11) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க், ஜாம்பா தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

 

 

சூப்பர் ஜோடி: பின் இணைந்த அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. அபாரமாக ஆடிய மேக்ஸ்வெல் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். டாம் கரான் பந்தை சிக்சருக்கு அனுப்பிய மேக்ஸ்வெல், சதம் கடந்தார். வோக்ஸ் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட கேரி, தன்பங்கிற்கு சதமடித்தார். ஆறாவது விக்கெட்டுக்கு 212 ரன் சேர்த்த போது அடில் ரஷித் பந்தில் மேக்ஸ்வெல் (108) அவுட்டானார். ஆர்ச்சர் ‛வேகத்தில்’ கேரி (106) வெளியேறினார்.

 

திரில் வெற்றி: ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 10 ரன் தேவைப்பட்டது. அடில் ரஷித் வீசிய 50வது ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்த மிட்சல் ஸ்டார்க், 4வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி வெற்றியை உறுதி செய்தார். ஆஸ்திரேலிய அணி 49.4 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 305 ரன்கள் எடுத்த வெற்றி பெற்றது. ஸ்டார்க் (11), கம்மின்ஸ் (4) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் வோக்ஸ், ரூட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் தட்டிச் சென்றார்.

 

212 ரன்கள்

அபாரமாக ஆடிய மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி ஜோடி 212 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் ஒருநாள் போட்டி அரங்கில் 6வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஆஸ்திரேலிய ஜோடியானது. இதற்கு முன், 2006ல் கோலாலம்பூரில் நடந்த விண்டீசுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாடின், மைக்கேல் ஹசி ஜோடி 6வது விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.

 

மூலக்கதை