சி.பி.எல்., அனுபவம்... ஐ.பி.எல்., அதிசயம் * ஆஷிஷ் நெஹ்ரா ஆருடம் | ஆகஸ்ட் 14, 2020

தினமலர்  தினமலர்
சி.பி.எல்., அனுபவம்... ஐ.பி.எல்., அதிசயம் * ஆஷிஷ் நெஹ்ரா ஆருடம் | ஆகஸ்ட் 14, 2020

புதுடில்லி: விண்டீஸ் மண்ணில் கரீபியன் பிரிமியர் லீக்( சி.பி.எல்.,) ஆக.18–செப்.10ல் நடக்க உள்ளது. இதில், விண்டீசின் போலார்டு, தென் ஆப்ரிக்காவின் இம்ரான் தாகிர், ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதே வீரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்க உள்ள ஐ.பி.எல்., தொடரிலும்(செப். 19–நவ.10) விளையாட உள்ளனர். 

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா கூறியது:

கொரோனா காரணமாக பெரும்பாலான வீரர்கள் ‘டுவென்டி–20’ போட்டிகளில் பங்கேற்கவில்லை. இவர்களுக்கு சி.பி.எல்., தொடர் வரப்பிரசாதமாக அமைய உள்ளது.  

இப்போட்டிகளின் மூலம் நல்ல பயிற்சி கிடைக்கும். சி.பி.எல்., தொடரில் பிரகாசித்தவர்கள்,  ஐ.பி.எல்., போட்டியிலும் முத்திரை பதிப்பர் என உத்தரவாதம் அளிக்க முடியாது. இருப்பினும் மற்ற வீரர்களைவிட ஒரு படி முன்னிலையில் இருப்பர்.  

ஒரு மாத காலம் கரீபிய மண்ணில் விளையாடிய  அனுபவம் நிச்சயம் கைகொடுக்கும். மும்பைக்காக ஆடும் போலார்டு, சென்னைக்காக களமிறங்கும் இம்ரான் தாகிர் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்துவர்.  ‘லெக்ஸ்பின்னர்’ தாகிருக்கு 41 வயதானாலும் கிரிக்கெட் மீதான தாகம் குறையவில்லை.  

விக்கெட் வீழ்த்தினால், இப்போதும் 20 வயது இளைஞர் போல கொண்டாடுகிறார். அர்ப்பணிப்பு உணர்வுமிக்க வீரர்.  வயதான நிலையில் அதிக போட்டிகளில் பங்கேற்பது நல்ல பலனை தரும். சி.பி.எல் தொடரை முடித்து விட்டு, ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க இருப்பது தாகிருக்கு சாதகமான விஷயம். இவ்வாறு நெஹ்ரா கூறினார்.

மூலக்கதை