சென்னை வருகிறார் ‛தல’ தோனி: கொரோனா சோதனையில் தேறினார் | ஆகஸ்ட் 13, 2020

தினமலர்  தினமலர்
சென்னை வருகிறார் ‛தல’ தோனி: கொரோனா சோதனையில் தேறினார் | ஆகஸ்ட் 13, 2020

ராஞ்சி: சென்னை அணி கேப்டன் தோனி, கொரோனா சோதனையில் தேறினார். திட்டமிட்டபடி பயிற்சி முகாமில் பங்கேற்க இன்று சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) 13வது ஐ.பி.எல்., சீசன், வரும் செப். 19 முதல் நவ. 10 வரை நடக்கிறது. இதற்கு தயாராகும் விதமாக சென்னை அணியின் 6 நாள் பயிற்சி முகாம் நாளை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது.

இதற்கு முன் சென்னை அணி வீரர்கள் கொரோனா சோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற ஐ.பி.எல்., கட்டுப்பாட்டுக்குழு விதிப்படி நேற்று காலை கேப்டன் தோனிக்கு (செல்லமாக ‘தல’) சோதனை நடத்தப்பட்டது. ராஞ்சியில் உள்ள தோனி வீட்டுக்கு வந்து சோதனை மாதிரிகளை பெற்றுச் சென்றனர்.

எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்த முடிவு மாலையில் வெளியானது. இதில் தோனிக்கு ‘நெகட்டிவ்’ என தெரிந்தது. இதையடுத்து திட்டமிபட்டபடி பயிற்சி முகாமில் பங்கேற்க, இன்று சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தவிர, ரெய்னா, ஹர்பஜன் சிங், அம்பதி ராயுடு உள்ளிட்ட வீரர்களும் சென்னை வரவுள்ளனர். வரும் 21ல் சென்னை அணியினர் தனி விமானம் மூலம் துபாய் செல்ல உள்ளனர்.

அதிக எதிர்பார்ப்பு: கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை அரையிறுதிக்கு பின் தோனி எவ்வித போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. விரைவில் ஓய்வை அறிவிப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இவர், ஐ.பி.எல்., தொடரில் விளையாட இருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மீண்டார் கருண் நாயர்

கருண் நாயர் 28, பஞ்சாப் ஐ.பி.எல்., அணிக்காக விளையாடுகிறார். 14 போட்டியில் 306 ரன்கள் எடுத்தார். இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டார். ஆக. 8ல் எடுத்த சோதனையில் மீண்ட இவர், ஆக. 20ல் பஞ்சாப் வீரர்களுடன் யு.ஏ.இ., செல்லவுள்ளார்.

மூலக்கதை