வெற்றி வாய்ப்பை கோட்டைவிட்டோம்: பாக்., கேப்டன் புலம்பல் | ஆகஸ்ட் 09, 2020

தினமலர்  தினமலர்
வெற்றி வாய்ப்பை கோட்டைவிட்டோம்: பாக்., கேப்டன் புலம்பல் | ஆகஸ்ட் 09, 2020

மான்செஸ்டர்: ‘‘இங்கிலாந்துக்கு எதிராக கிடைத்த வெற்றி வாய்ப்பை கோட்டைவிட்டோம்,’’ என, பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. மான்செஸ்டரில் நடந்த முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 326, இங்கிலாந்து 219 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 169 ரன் எடுத்தது.

பின், 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி, ஒரு கட்டத்தில் 117 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பின் இணைந்த ஜாஸ் பட்லர் (75), கிறிஸ் வோக்ஸ் (84*) ஜோடி வெற்றிக்கு வித்திட்டது. இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆட்டநாயகன் விருதை வோக்ஸ் வென்றார்.

இதுகுறித்து பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி கூறியது: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஒரு சிறந்த போட்டி. ஆனால் முடிவு ஏமாற்றம் அளித்தது. எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால் முக்கியமான ‘ரன்–அவுட்’ வாய்ப்புகளை வீணடித்ததால் தோல்வியை தழுவ வேண்டியதாயிற்று. நாங்கள் நிர்ணயித்த இலக்கு போதுமானது தான்.

பவுலர்கள் ‘ரிவர்ஸ் சுவிங்’ வீச முடியாதது ஆச்சர்யமாக இருந்தது. இருப்பினும் 5 விக்கெட் கைப்பற்றி நெருக்கடி கொடுத்தோம். ஆனால் பட்லர், வோக்ஸ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, எங்களது வெற்றியை பறித்துவிட்டனர்.

இவ்வாறு அசார் அலி கூறினார்.

இங்கிலாந்து ‘ஆல்–ரவுண்டர்’ பென் ஸ்டோக்ஸ், குடும்ப காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கு எதிரான மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினார். இவர், நியூசிலாந்தில் உள்ள தனது பெற்றோரை பார்க்க செல்வதாக கூறப்படுகிறது. முன்னாள் நியூசிலாந்து ரக்பி வீரரான இவரது தந்தைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த டிசம்பரில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது.

ஜோ ரூப் பாராட்டு

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறுகையில், ‘‘பாகிஸ்தான் நிர்ணயித்த 277 ரன்களை ‘சேஸ்’ செய்ய சிறந்த ‘பார்ட்னர்ஷிப்’ தேவைப்பட்டது. முக்கியமான நேரத்தில் இணைந்த பட்லர், வோக்ஸ் ஜோடி வெற்றி தேடித்தந்தனர். இது இவர்களது சிறந்த இன்னிங்ஸ். இவர்கள் சுழற்பந்துவீச்சை எதிர்கொண்ட விதம் பாராட்டுக்குரியது,’’ என்றார்.

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் கூறுகையில், ‘‘போட்டியில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். ஆனால் கிடைத்த வாய்ப்பை வீணடித்தது வருத்தம். கேப்டன் அசார் அலி, சில நேரங்களில் பவுலர்களை கையாண்ட விதம் ஏமாற்றம் அளிக்கிறது,’’ என்றார்.

மூலக்கதை