நிதி நெருக்கடி ஏற்படுமா?: கங்குலி விளக்கம் | ஆகஸ்ட் 09, 2020

தினமலர்  தினமலர்
நிதி நெருக்கடி ஏற்படுமா?: கங்குலி விளக்கம் | ஆகஸ்ட் 09, 2020

புதுடில்லி: ‘‘ஐ.பி.எல்., ‘டைட்டில் ஸ்பான்சரான’ சீன நிறுவனம் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டதால் எவ்வித நிதி நெருக்கடியும் ஏற்படாது,’’ என, சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடக்க இருந்த 13வது ஐ.பி.எல்., சீசன், கொரோனா அச்சம் காரணமாக, ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) வரும் செப். 19 முதல் நவ. 10 வரை நடக்கவுள்ளது. இதன் ‘டைட்டில் ஸ்பான்சராக’ சீன நிறுவனம் இருந்தது.

சமீபத்தில் லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட கைகலப்பில் 20 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட, சீன பொருட்கள் மற்றும் அதன் நிறுவனங்களுக்கு எதிர்ப்புகள் எழுந்தன. இதனால் இந்த ஒரு ஆண்டு மட்டும் ‘டைட்டில் ஸ்பான்சரில்’ இருந்து சுமூகமாக விலகிக் கொள்வது என சீன நிறுவனம் முடிவு செய்தது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), சீன நிறுவனத்தை முறைப்படி ‘சஸ்பெண்ட்’ செய்தது. இதனால் பி.சி.சி.ஐ.,க்கு நிதி நெருக்கடி ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பி.சி.சி.ஐ., தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில், ‘‘சீன நிறுவனத்தை ‘சஸ்பெண்ட்’ செய்ததால் எவ்வித நிதி நெருக்கடியும் ஏற்படாது. இது ஒரு சிறிய தடங்கல் தான். பி.சி.சி.ஐ., வலுவான அடித்தளம் கொண்டுள்ளது. வீரர்கள், நிர்வாகிகள் என அனைவரும் இந்த அமைப்பை வலிமையாக்கி உள்ளனர். எங்களிடம் எப்போதும் மாற்று திட்டம் உண்டு. எனவே இவ்விஷயத்தை எளிதாக கையாள முடியும்,’’ என்றார்.

மூலக்கதை