மறக்க முடியுமா? - சத்யா

தினமலர்  தினமலர்
மறக்க முடியுமா?  சத்யா

படம் : சத்யா
வெளியான ஆண்டு : 1988
நடிகர்கள் : கமல், அமலா, கிட்டி
இயக்கம் : சுரேஷ் கிருஷ்ணா
தயாரிப்பு : ராஜ்கமல் பிலிம்ஸ்

அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக, இளைஞர்களை பலிகடா ஆக்குவதை, அப்பட்டமாக தோலுரித்துக் காட்டிய படம், சத்யா. இந்த படம், 1985ல், சன்னி தியோல் நடிப்பில் வெளிவந்த, அர்ஜுன் என்ற, ஹிந்தி படத்தின், 'ரீமேக்' ஆகும்.

இயக்குனர், கே.பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய, சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தின் மூலம், இயக்குனராக உயர்ந்தார். அவர் எடுத்த முதல் ஷாட் எது தெரியுமா... வீட்டில், கமல் அறிமுகமாகும் காட்சி. நான்கு நிமிடங்கள், 'கட்' இன்றி, இடம் பெறும்!

இப்படத்தை தயாரித்ததும், நடிகர் கமல் தான். வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடிய காலத்தில் வெளியான படம். வேலை தேடும் பட்டதாரி இளைஞனாக, மொட்டையடித்து, 10 நாட்களானது போன்ற தலைமுடி, தாடி, புஜத்தோடு இறுக்கமாக மடித்த சட்டை, கையில் காப்பு, 'இன்' செய்த தோற்றத்துடன், கமல் நடித்திருப்பார். அவரது தோற்றத்தால் ஈர்க்கப்படாத, 1980-களின் இளைஞர்களே இல்லை.

குளுகுளு ஆப்பிள் போல இருந்தார், நடிகை அமலா. இப்படத்தின் மூலம், தமிழகத்தின் கனவுக் கன்னியாக ஏற்றம் பெற்றிருந்தார். சிரித்துக்கொண்டே கழுத்தறுக்கும் அரசியல்வாதியாக, நடிகர் கிட்டி பின்னியிருந்தார். இவருக்கு குரல் கொடுத்தது, பாடகர் பாலசுப்பிரமணியம்!

இளையராஜா இசையில், லதா மங்கேஷ்கர் குரலில், 'வளையோசை கலகல...' பாடலில், இசையுலகம் மயங்கி கிறங்கியது! பின்னணியில், அமைதி காத்து, காட்சியின் வீரியத்திற்கு இடம் கொடுத்த வகையில், தான் இசைஞானி என்பதையும் இளையராஜா நிரூபித்தார்.

இந்த படம், 150 நாட்கள் திரையரங்கில் ஓடியது. தெலுங்கில், அதே பெயரில், 'டப்பிங்' செய்யப்பட்டது. அநீதி கண்டு பொங்கும் அனைவருக்குள்ளும், சத்யா இருக்கிறான்!

மூலக்கதை