விண்ணை முட்டும் தங்கம் விலை - சவரன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியது : நடுத்தரவர்க்கத்தினர் கவலை

தினமலர்  தினமலர்
விண்ணை முட்டும் தங்கம் விலை  சவரன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியது : நடுத்தரவர்க்கத்தினர் கவலை

சென்னை : தங்கம், வெள்ளி விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இன்று சவரன் ரூ.43 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகிறது. இப்படியே போனால் சாமானியர்களுக்கு தங்கம் இனி எட்டாக்கனியாகவே மாறிவிடும்.

உலகின் பல நாடுகளில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதால் முதலீட்டாளர்கள் தங்கம் வெள்ளியில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் உலக சந்தையில் தங்கம் வெள்ளி விலை உயர்ந்துள்ளதால் உள்நாட்டிலும் அவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 5374 ரூபாய்க்கும்; சவரன் 42 ஆயிரத்து 992 ரூபாய்க்கும் விற்பனையானது. இன்று(ஆக.,7) மேலும் உயர்ந்துள்ளது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.46 உயர்ந்து ரூ.5,420க்கும், சவரன் ரூ.368 உயர்ந்து ரூ.43360க்கும் விற்பனையாகிறது. கடந்த ஒருவார காலமாக நாள் ஒன்றுக்கு சவரன் ரூ.400 வீதம் உயர்ந்து வருகிறது. 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.56,910க்கு விற்பனையாகிறது.

தங்கத்தை விட வெள்ளியின் விலை இன்னும் உச்சம் தொட்டு வருகிறது. இன்று ஒரு கிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.2.20 காசுகள் உயர்ந்து ரூ.83.80க்கு விற்பனையாகிறது.

இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில் ''அதிக லாபம் கிடைப்பதால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதுபோல் வெள்ளியிலும் பெருமளவு முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தை போல் வெள்ளிவிலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது'' என்றார்.

தங்கம் - வெள்ளி விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருவதால் நடுத்தர வர்க்கத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர். குறிப்பாக பெண் பிள்ளை வைத்திருப்போர் தங்களது மகளை திருமணம் செய்து வைக்க, ஏதோ அவர்களால் முடிந்தளவு கொடுக்கும் நகையை கூட இப்போது உள்ள விலைக்கு வாங்க முடியுமா என தவிப்பில் உள்ளனர்.

மூலக்கதை