அடிலெய்டில் ‘பாக்சிங்டே’ டெஸ்ட்: ஆஸி., அணி திட்டம் | ஆகஸ்ட் 06, 2020

தினமலர்  தினமலர்
அடிலெய்டில் ‘பாக்சிங்டே’ டெஸ்ட்: ஆஸி., அணி திட்டம் | ஆகஸ்ட் 06, 2020

மெல்போர்ன்: கொரோனா அச்சம் காரணமாக இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மெல்போர்னில் மோத இருந்த ‘பாக்சிங்டே’ டெஸ்ட் போட்டியை அடிலெய்டில் நடத்த திட்டமிட்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் டிச. 3–7ல் பிரிஸ்பேனில் நடக்கிறது. இரண்டாவது டெஸ்ட் (டிச. 11–15), அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடக்கவுள்ளது. மூன்றாவது டெஸ்ட் (டிச. 26–30) மெல்போர்னில் ‘பாக்சிங்டே’ போட்டியாக நடத்தப்படுகிறது. நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் (2021, ஜன. 3–7) சிட்னியில் நடக்க உள்ளது.

மூன்றாவது டெஸ்ட் நடக்கவுள்ள மெல்போர்னில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தவிர, 170 பேர் பலியாகினர்.

 

இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இப்போட்டியை அடிலெய்டில் நடத்த ஆலோசித்து வருவதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அடிலெய்டில், கொரோனா பாதிப்பு மிகக்குறைவாக இருப்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

மூலக்கதை