சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் வருவாய் 20 சதவீதம் பாதிக்கப்படும்

தினமலர்  தினமலர்
சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் வருவாய் 20 சதவீதம் பாதிக்கப்படும்

புதுடில்லி:உள்நாட்டு சாலை போக்குவரத்து துறை, நடப்பு நிதியாண்டில், 20 சதவீதம் அளவுக்கு சரிவைக் காணக்கூடும் என, இக்ரா ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது.இது குறித்து, அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கொரோனா பரவல் காரணமாக, மத்திய, மாநில அரசுகளால் நாடு முடக்கப்பட்டதை அடுத்து, இந்திய சரக்கு போக்குவரத்து துறை, குறிப்பாக, சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.தேசிய அளவில் தொடர்ந்து, 40 நாட்கள் நாடு முடக்கப்பட்டதால், நாட்டின் பொருளாதார செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகின.


இதன் விளைவாக, கடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில், சரக்குகள் கிடைப்பதில் சரிவு ஏற்பட்டது. இது, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மேலும் அதிகரித்து விட்டது.நடப்பு நிதியாண்டில், சரக்கு போக்குவரத்து நிறுவனங்களின் வருவாயில், 18 – 20 சதவீதம் அளவுக்கு சரிவு காணக்கூடும்.

குறைந்த அளவில் சரக்குகள் கிடைப்பது, ஓட்டுனர்களுக்கான சம்பள உயர்வு, வாகனத்துக்கான மாதாந்திர தவணை, பராமரிப்பு செலவு உள்ளிட்ட காரணங்களால், செலவு அதிகரித்து, வருவாய் பாதிக்கக்கூடிய நிலை இருக்கிறது.இதனால் இத்துறை மீதான மதிப்பீட்டை, ’நிலையானது’ என்பதிலிருந்து, ’எதிர்மறை’ எனும் நிலைக்கு மாற்றியுள்ளோம்.இவ்வாறு இக்ரா தெரிவித்துள்ளது.

மூலக்கதை