விராத் கோஹ்லி ‘நம்பர்–1’: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி தரவரிசையில் | ஆகஸ்ட் 05, 2020

தினமலர்  தினமலர்
விராத் கோஹ்லி ‘நம்பர்–1’: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி தரவரிசையில் | ஆகஸ்ட் 05, 2020

துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் கோஹ்லி ‘நம்பர்–1’ இடத்தில் நீடிக்கிறார்.

ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையின் முதலிரண்டு இடங்களை முறையே இந்தியாவின் விராத் கோஹ்லி (871 புள்ளி), ரோகித் சர்மா (855) தக்கவைத்துக் கொண்டனர். பாகிஸ்தானின் பாபர் ஆசம் (829) 3வது இடத்தில் நீடிக்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சதம் கடந்த அயர்லாந்தின் ஸ்டிர்லிங் (647 புள்ளி), பால்பிர்னி (564) முறையே 26, 42வது இடத்துக்கு முன்னேறினர். இங்கிலாந்து கேப்டன் மார்கன் (670), 22வது இடத்துக்கு முன்னேறினார்.

பும்ரா ‘நம்பர்–2’: பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 719 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறார். முதலிடத்தை நியூசிலாந்தின் டிரண்ட் பவுல்ட் (722 புள்ளி) தக்கவைத்துக் கொண்டார். இங்கிலாந்துக்கு எதிராக வேகத்தில் அசத்திய அயர்லாந்தின் கிரெய்க் யங், 40 இடங்கள் முன்னேறி முதன்முறையாக 89வது இடத்தை கைப்பற்றினார். இங்கிலாந்து ‘சுழல்’ வீரர் அடில் ரஷித் 29வது இடத்தில் இருந்து 25வது இடத்துக்கு முன்னேறினார்.

 

மூலக்கதை