ஏற்றுமதி ‘ஆர்டர்’கள் அதிகரித்தாலும் ஊழியர்கள் பற்றாக்குறை நீடிக்கிறது

தினமலர்  தினமலர்
ஏற்றுமதி ‘ஆர்டர்’கள் அதிகரித்தாலும் ஊழியர்கள் பற்றாக்குறை நீடிக்கிறது

புதுடில்லி:நாட்டின் வணிக ஏற்றுமதிக்கான, ‘ஆர்டர்’கள் வரத்து அதிகரித்த போதிலும், ஊழியர்கள் பற்றாக்குறை ஒரு பிரச்னையாக இருப்பதாக, ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆர்டர்கள் அதிகரித்து வரும் நிலையில், அடுத்து வரும் மாதங்களில் ஏற்றுமதியில் மீட்சி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், ஊழியர்கள் பற்றாக்குறை பிரச்னையை எதிர் கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக, ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் டைரக்டர் ஜெனரல் அஜய் சஹாய் கூறியதாவது:குறுகிய காலத்தில் ஏற்றுமதிக்கான ஆர்டர்களில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், ஏற்றுமதியாளர்களுக்கு இன்னும் நீண்ட கால ஆர்டர்கள் கிடைக்க வில்லை. ஆர்டர்கள் அதிகரித்து வருவதால், நிலைமை மேலும் மேம்படும் என, நாங்கள் எதிர்பார்க்கிறோம்.


ஆர்டர்கள் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருகின்றன. ஊழியர்கள் பற்றாக்குறையை பொறுத்தவரை, தொழிற்சாலைகள் இன்னும் முழுமையான ஊழியர்கள் எண்ணிக்கையுடன் செயல்படவில்லை. விரைவில் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என, கருதுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து வேறு சிலர் குறிப்பிடும் போது, ஆலைகள், 60 சதவீத ஊழியர்களுடன் செயல்பட்டு வருவதாகவும், அதனால் உற்பத்தியை அதிகரிக்க இயலவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், நவம்பர் மாத வாக்கில் நிலைமை முழுமையாக சீரடைந்து விடும் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை