யு.பி.ஐ., ‘ஆட்டோபே’ வசதியை பயன்படுத்தும் முறை

தினமலர்  தினமலர்
யு.பி.ஐ., ‘ஆட்டோபே’ வசதியை பயன்படுத்தும் முறை

தொடர்ந்து செலுத்த வேண்டிய கட்டணங்களை மின்னணு முறையில் குறித்த நேரத்தில் எளிதாக நிறைவேற்றும் வகையில், யு.பி.ஐ., மேடையில், ‘ஆட்டோபே’ வசதியை தேசிய பேமென்ட் கழகம் அண்மையில் அறிமுகம் செய்துள்ளது.


வாடிக்கையாளர்கள், யு.பி.ஐ., மொபைல் செயலியுடன் இணைக்கப்பட்ட தங்கள் வங்கி கணக்கு மூலம் கட்டணங்களை தானாக செலுத்தலாம். தொடர் கட்டணங்களை செலுத்துவதற்கான எளிதான, பாதுகாப்பான இந்த வசதியை பயன்படுத்தும் முறையை பார்க்கலாம்:

அனைத்து பில்கள்:


யு.பி.ஐ., ஆட்டோபே வசதி மூலம், வாடிக்கையாளர்கள், தொடர்ந்து செலுத்த வேண்டியிருக்கும் மின் கட்டணம், மொபைல் ரீசார்ஜ், கடன் தவணை, காப்பீடு தொகை, ஓ.டி.டி., சந்தா, மியூச்சுவல் பண்ட் முதலீடு ஆகியவற்றை மேற்கொள்ளலாம். யு.பி.ஐ., செயலியில், ‘இ- – மேண்டேட்’ மூலம் இந்த வசதியை அமைத்துக்கொள்ளலாம்.

பதிவு செய்யும் முறை:


ஆட்டோபே வசதியை, யு.பி.ஐ., செயலி அல்லது கியூஆர் ஸ்கேன் மூலம் இயக்கி கொள்ளலாம். பதிவு செய்யும் போது, பணம் பெறும் நிறுவனத்தின் யு.பி.ஐ., அடையாளத்தை குறிப்பிட்டு, கட்டண தொகை, அதற்கான கால அளவை குறிப்பிட வேண்டும். நோட்டிபிகேஷன் வரும் போது, ‘பின்’ எண் சமர்ப்பித்து அங்கீகரிக்க வேண்டும்.

கால அளவு:


இந்த முறையில், தினசரி, வாரந்திர, மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு, ஆண்டு அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம். செலுத்தும் தொகை, 2,000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால் ஒரு முறை அனுமதி கொடுத்தால் போதுமானது. அதற்கு மேலான தொகை எனில், பரிவர்த்தனையை நிறைவேற்ற, ‘பின்’ என் மூலம் அங்கீகரிக்க வேண்டும்.

கட்டண தகவல்கள்:


இந்த வசதியை பதிவு செய்த பிறகு, அதற்கான தகவல் அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு, கட்டணம் செலுத்த வேண்டியதற்கு முன் மற்றும் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்ட பின், தகவல் அளிக்கப்படும். எப்போது வேண்டுமானாலும், கட்டண ஆணையை ரத்து செய்யலாம் அல்லது மாற்றலாம்.

பரிவர்த்தனை வரலாறு:


இந்த வசதியை பயன்படுத்த வங்கிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்காது. கட்டணம் செலுத்துவதற்கான தொகை வங்கி கணக்கில் இல்லை எனில், பரிவர்த்தனை ரத்தாகி விடும். இதற்கு அபராதம் கிடையாது. பரிவர்த்தனை விபரங்களை செயலியில் பார்க்கும் வசதியும் உள்ளது.

மூலக்கதை