மீட்சிக்கு திரும்பும் வாகன விற்பனை ஜூலை மாத நிலவரம் என்ன?

தினமலர்  தினமலர்
மீட்சிக்கு திரும்பும் வாகன விற்பனை ஜூலை மாத நிலவரம் என்ன?

புதுடில்லி : கடந்த ஜூலை மாத வாகன விற்பனையில், சரிவுகள் தொடர்ந்தாலும், கடந்த மூன்று மாதங்களுடன் ஒப்பிடும்போது, மீட்சி துவங்கி இருப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக உள்நாட்டு விற்பனையில் மீட்சி தெரிவதாக தெரிவித்துள்ளனர்.

மாருதி சுசூகி:
நாட்டின் மிகப் பெரிய மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமான, மாருதி சுசூகியின் விற்பனை, கடந்த ஜூலையில், 1.1 சதவீதம் அளவுக்கே சரிவை சந்தித்துள்ளது. அதேசமயம், உள்நாட்டு விற்பனையை பொறுத்தவரை, 1.3 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியை கண்டுள்ளது. இதையடுத்து, கடந்த ஆறு மாதங்களில் முதன் முறையாக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது, மாருதி சுசூகி நிறுவனம்.இந்நிறுவனம், கடந்த ஜூலையில், 1.08 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே, கடந்த ஆண்டு ஜூலையில், 1.09 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.உள்நாட்டு விற்பனையை பொறுத்தவரை, கடந்த ஆண்டு ஜூலையில், ஒரு லட்சத்து ஆறு வாகனங்கள் விற்பனை ஆகியிருந்த நிலையில், கடந்த ஜூலையில், ஒரு லட்சத்து, 1,307 வாகனங்கள் விற்பனை ஆகியிருக்கின்றன. ஆல்டோ, வேகன்_ஆர் உள்ளிட்ட மினி கார்களின் விற்பனை, 49.1 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. அதேசமயம், காம்பாக்ட் கார்கள், மிட் சைஸ் செடான் கார்கள் ஆகியவற்றின் விற்பனை சரிந்துள்ளது. இருப்பினும், பல்வகை பயன்பாட்டு வாகனங்களான எஸ்.யு.வி., பிரிவைச் சேர்ந்த, விட்டாரா பிரெஸ்ஸா, எஸ். கிராஸ் உள்ளிட்ட கார்களின் விற்பனை, 26.3 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்றுமதியை பொறுத்தவரை, மாருதி சுசூகி நிறுவனம், 27 சதவீத சரிவை சந்தித்துள்ளது.


டொயோட்டா கிர்லோஸ்கர்:
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை, கடந்த ஜூலையில், 48 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. பல்வேறு சோதனைகள் இருந்தபோதும், ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, ஜூலையில் விற்பனை நன்றாகவே உள்ளது. விற்பனை வளர்ச்சிப் பாதைக்குத் திரும்ப துவங்கியுள்ளது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில், இந்நிறுவனம், 10 ஆயிரத்து, 423 கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த ஜூலையில், 5,386 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

ஹூண்டாய் மோட்டார்:
மதிப்பீட்டு மாதத்தில், ஹூண்டாய் நிறுவனம் விற்பனையில், 28 சதவீத சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில், 57 ஆயிரத்து, 310 கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு ஜூலையில், மொத்தம், 41 ஆயிரத்து, 300 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.உள்நாட்டு விற்பனையை பொறுத்தவரை, 2 சதவீதம் அளவுக்கே சரிவைக் கண்டுள்ளது. ஆனால், ஏற்றுமதியை பொறுத்தவரை, 83 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது.

மகிந்திரா அண்டு மகிந்திரா:
இந்நிறுவனம், அதன் மொத்த விற்பனையில், 36 சதவீத சரிவை, ஜூலை மாதத்தில் சந்தித்துள்ளது.உள்நாட்டு விற்பனையை பொறுத்தவரை, 35 சதவீத சரிவையும்; ஏற்றுமதியில், 45 சதவீத சரிவையும் இந்நிறுவனம் சந்தித்துள்ளது.இந்நிறுவனத்தின் மொத்த விற்பனையை பொறுத்தவரை, கடந்த ஆண்டு ஜூலையில், 40 ஆயிரத்து, 142 கார்கள் விற்பனை ஆகியிருந்த நிலையில், நடப்பு ஆண்டு ஜூலையில், 25 ஆயிரத்து, 678 கார்களாக சரிந்துவிட்டது. இந்நிறுவனம் கார்கள் விற்பனையில் சரிவைக் கண்டாலும், டிராக்டர் விற்பனையில் உயர்வை சந்தித்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில் இந்நிறுவனத்தின் மொத்த டிராக்டர் விற்பனை, 27 சதவீதம் அதிகரித்துள்ளது. இம்மாதத்தில் மொத்தம், 25 ஆயிரத்து, 402 டிராக்டர்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை